என் மலர்
இந்தியா

வாக்குகளை விற்பவர்கள் விலங்குகளாக பிறப்பார்கள்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
- வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்றால் அது மனித குலத்துக்கு அவமானம்.
- அப்படி வாக்களிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் விலங்குகளாக பிறப்பார்கள் என்றார்.
இந்தூர்:
மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் உஷா தாகூர். முன்னாள் மந்திரியுமான இவர், தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசியதாவது:
பா.ஜ.க. அரசின் ஏராளமான திட்டங்களால் பயனாளிகளுக்கு ஆயிரக்கணக்கான பணம் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அப்படியிருந்தும் கூட தங்கள் வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்றால், அது மனித குலத்துக்கு அவமானம் ஆகும்.
அப்படி பணம், சேலை, மது போன்றவற்றை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒட்டகம், செம்மறி, வெள்ளாடு, நாய், பூனையாகத் தான் பிறப்பார்கள் என்பதை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஜனநாயகத்தை விற்பவர்கள் இப்படித்தான் பிறப்பார்கள். நீங்கள் வாக்களிப்பது ரகசியமானது என்றாலும், கடவுள் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள் என தெரிவித்தார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இது நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.






