என் மலர்
இந்தியா

தேங்க் யூ மகாராஷ்டிரா: மாநகராட்சி தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி பதிவு
- எங்களின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுக்கான தொலைநோக்குப் பார்வை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற என்.டி.ஏ-வின் திட்டத்திற்கு தங்கள் ஆசிகளை வழங்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக 30 வருடத்திற்கு பிறகு மும்பை மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. புனே உள்ளிட்ட மாநகராட்சியிலும் வெற்றி வாகை சூடுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "தேங்க் யூ மகாராஷ்டிரா. எங்களின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுக்கான தொலைநோக்குப் பார்வை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மாநிலத்தின் ஆற்றல்மிக்க மக்கள், மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற என்.டி.ஏ-வின் திட்டத்திற்கு தங்கள் ஆசிகளை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மக்களுக்கு எனது நன்றிகள்.
இது முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கும், இந்த மாநிலத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்கும் ஆன ஒரு வாக்கெடுப்பு ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "மகாராஷ்டிரா முழுவதும் மக்களிடையே அயராது உழைத்த ஒவ்வொரு என்.டி.ஏ. தொண்டரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் நமது கூட்டணியின் சாதனைகளைப் பற்றிப் பேசினார்கள், வரும் காலங்களுக்கான நமது தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார்கள், மேலும் எதிர்க்கட்சிகளின் பொய்களையும் திறம்பட முறியடித்தார்கள். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.






