என் மலர்
இந்தியா

கர்னூல் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் எரித்துக்கொலை
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆமோஸ் திடீரென காணாமல் போனார்.
- கணவர் காணாமல் போனது குறித்து ஆமோஸ் மனைவி அருணா சைதராபாத் போலீசில் புகார் செய்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அல்வா பகுதியை சேர்ந்தவர் காடிப்பன்டி ஆமோஸ் (வயது 26). பட்டதாரி வாலிபரான இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் அருணாவை காதலித்து வந்தார். இவரது காதலுக்கு அருணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் அதோணி பகுதியில் எமிகாணுரிலும் வசித்து வந்தனர். தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கர்னூல் அடுத்த கல்லூர் எஸ்டேட் பகுதியில் தங்கி இருந்து சிட்டி ஸ்கொயர் மாலில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆமோஸ் திடீரென காணாமல் போனார். கணவர் காணாமல் போனது குறித்து அவரது மனைவி அருணா சைதராபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஹந்திரீனா ஆற்றங்கரையோரம் உள்ள அடர்ந்த முள் புதரில் ஆமோஸ் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சைதராபாத் டிஎஸ்பி மகேஷ் இன்ஸ்பெக்டர் சங்கர் அய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி சோதனை செய்தபோது, ஆமோசை மர்மநபர்கள் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து முள் புதரில் வீசி சென்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாற்று சமூக பெண்ணை காதல் திருமணம் செய்ததால் ஆமோஸ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.






