search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஸ்வப்னா சுரேசை பின்னால் இருந்து சிலர் இயக்குகின்றனர்- சரிதாநாயர்
    X

    ஸ்வப்னா- சரிதா நாயர்



    ஸ்வப்னா சுரேசை பின்னால் இருந்து சிலர் இயக்குகின்றனர்- சரிதாநாயர்

    • ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
    • ஸ்வப்னாவின் 164 பக்க வாக்குமூலத்தின் நகல் கோரி சரிதா தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

    அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். அவரது இந்த புகாரால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

    பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முதல்-மந்திரி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டி வருகின்றனர். இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.

    இந்த சூழலில் ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் சிறையில் இருந்தபோது, ஸ்வப்னாவும் சிறையில் இருந்தார். அப்போது என்னிடம் பேசிய அவர், இந்த வழக்கில் முதல்-மந்திரியை தேவையில்லாமல் உள்ளே இழுத்துள்ளதாக தெரிவித்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில், ஸ்வப்னாவின் 164 பக்க வாக்குமூலத்தின் நகல் கோரி சரிதா தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால் அந்த அறிக்கையை விசாரணை நிறுவனத்துடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.

    விசாரணை முடியும் வரை ஸ்வப்னாவின் அறிக்கையை பகிர முடியாது என்று நீதிமன்றம் கூறி உள்ளது. எனினும், ஐகோர்ட்டை அணுகப் போவதாக சரிதாவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் ஸ்வப்னா சுரேஷ் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×