search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள எம்.எல்.ஏ. மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
    X

    கேரள எம்.எல்.ஏ. மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    • அன்வர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜூ நோயல் என்பவர் மன்னார்காடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் செய்தார்.
    • அன்வர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் நீலம்பூர் தொகுதி இடதுசாரி ஜனநாயக முன்னணியின் எம்.எல்.ஏ. அன்வர். இவர் பாலக்காடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பற்றி மிகவும் அவதூறாக பேசினார்.

    அதாவது காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார். காந்தி என்ற குடும்ப பெயரை விடுவித்து ராகுல் என்று தான் அவரை அழைக்க வேண்டும். ராகுலின் டி.என்.ஏ.வை ஆய்வு செய்யவேண்டும் என்று பேசினார்.

    அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்வர் எம்.எல்.ஏ. மீது தேர்தல் ஆணையத்தில் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹாசன் புகார் செய்தார். மேலும் அவர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த பிஜூ நோயல் என்பவர் மன்னார்காடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் செய்தார்.

    அதனை விசாரித்த கோர்ட்டு, அன்வர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் அன்வர் எம்.எல்.ஏ. மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 153(1) ஏ மற்றும் 125 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    Next Story
    ×