search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    14, 15-ந்தேதிகளில் பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்... கேரள அரசு வேண்டுகோள்
    X

    14, 15-ந்தேதிகளில் பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்... கேரள அரசு வேண்டுகோள்

    • தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
    • வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஜோதி தரிசனத்துக்கான பூஜை நேரம் மற்றும் வழிமுறைகளை சபரிமலை திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நாளை மறுநாள் (ஜனவரி 13) வரை இணையதளத்தில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் போ் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். முன்பதிவு இல்லாத பக்தா்கள் யாரும் சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மகர விளக்கு பிரசாத சுத்திக் கிரியைகள் நடைபெற உள்ளன.

    ஜனவரி 14-ந்தேதி உஷ பூஜைக்கு பிறகு பிம்ப சுத்தி பூஜை நடைபெற உள்ளது. ஜனவரி 15-ந்தேதி முன்பதிவு செய்த 40 ஆயிரம் போ் மட்டுமே சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனா்.

    மகரவிளக்கு பூஜைக்காக திங்கட்கிழமை(வருகிற15) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 2.46 மணிக்கு மகரசங்கரம பூஜையும், நெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு பந்தள மன்னா் வழங்கிய திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, வருகிற15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருவாபரணத்தை ஐயப்பனுக்கு சாா்த்தி மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. இதன் பின்னா் மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு தரிசனமும் நடைபெறும்.

    மேலும் வருகிற15-ந் தேதியிலிருந்து வருகிற18-ந்தேதி வரை மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப சாமியின் ஊா்வலம் நடைபெற உள்ளது. வருகிற 18-ந்தேதி வரை ஐயப்ப பக்தா்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஜனவரி 19-ந்தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.


    வருகிற 20-ந்தேதி அன்று மாளிகைப் பரத்தம்மன் சன்னதியில் குருதி பூஜை நடைபெறுகிறது. வருகிற 21-ந் தேதி காலையில் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனைக்கு திருப்பி கொண்டு செல்லப்படும். பின்னா் பந்தளம் மன்னரின் பிரதிநிதி ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.

    பொங்கல் விடுமுறையையொட்டி 2 நாட்களுக்கு பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகைக்கு அதிக விடுமுறை தினங்கள் என்பதாலும், அடுத்த 10 நாட்களில் மகர விளக்கு சீசன் நிறைவடைய இருப்பதாலும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அடுத்த சில நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருகிற 14-ந்தேதி 50 ஆயிரம் பேரும், 15-ந்தேதி 40 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்காக இணைய வழியில் முன்பதிவு செய்ய முடியும்.

    கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இவ்விரு நாட்களிலும் குழந்தைகள், பெண்கள் வருவதை தவிர்க்க வேண்டும். விடுமுறை முடிந்த பிறகு வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×