search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாச்சல பிரதேசத்தில் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பாஜக: எங்கெங்கு சறுக்கியது- ஒரு அலசல்
    X

    இமாச்சல பிரதேசத்தில் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பாஜக: எங்கெங்கு சறுக்கியது- ஒரு அலசல்

    • காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள 40 தொகுதிகளில் 23 தொகுதிகளை பா.ஜனதாவிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளது.
    • 20 தொகுதிகளை பா.ஜனதா தக்கவைத்துக்கொண்டது. காங்கிரசிடம் இருந்த 4 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

    குஜராத்தில் இமாலய வெற்றியை ருசித்த பா.ஜனதா இமாச்சல பிரதேசத்தில் கைவசம் இருந்த ஆட்சியை இழந்தது ஏன் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. கடந்த 37 ஆண்டுகளாக மாறி மாறிதான் ஆட்சிகள் அமைந்துள்ளன.

    ஆனால் இந்த முறை அந்த சரித்திரம் மாறும். மீண்டும் பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும் என்றே கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன. கணிக்க முடியாத அளவுக்கு தான் கள நிலவரம் இருந்து இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    மொத்த தொகுதிகள்-68 காங்கிரஸ் வென்ற தொகுதிகள்-40, பா.ஜனதா வென்ற தொகுதிகள்-25. ஆட்சி அமைக்க 35 தொகுதிகள் தான் தேவை. ஆனால் 'கை' கைப்பற்றி இருப்பது 40 தொகுதிகள். அப்படி இருந்தும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் இமாலய வெற்றி என்று சொல்ல முடியவில்லை.

    நூலிழையில் தான் காங்கிரஸ் வென்றுள்ளது. அதே போல் நூலிழையில் தான் பா.ஜனதா வெற்றி வாய்ப்பை இழந்தும் இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கு 43.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.

    பா.ஜனதாவுக்கு 43 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது 1 சதவீதத்தை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் வென்றுள்ளது. கடுமையான இழுபறிக்கு இடையே தான் காங்கிரஸ் கரையேறி இருக்கிறது.

    2017 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்து 19 தொகுதிகளை பா.ஜனதா இழந்துள்ளது. அந்த தொகுதிகள் காங்கிரசுக்கு கை கொடுத்துள்ளது.

    பா.ஜனதாவை விட காங்கிரஸ் 15 தொகுதிகள் அதிகம் பெற்றுள்ளது. ஆனால் 18 தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே பா.ஜனதா தோற்றுள்ளது.

    காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள 40 தொகுதிகளில் 23 தொகுதிகளை பா.ஜனதாவிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளது. 20 தொகுதிகளை பா.ஜனதா தக்கவைத்துக்கொண்டது. காங்கிரசிடம் இருந்த 4 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

    9 தொகுதிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. ஆனால் 4 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா 25 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. 50 சதவீதம் வாக்குகளை காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், பா.ஜனதா 9 தொகுதிகளிலும் பெற்றுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை ஒரு கோடிக்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய மாநிலம். சிம்லா, குலுமணாலி, தர்மசாலா ஆகிய சுற்றுலா தலங்கள் புகழ் பெற்றவை. ஆப்பிள் விவசாயம் தான் முக்கியமான தொழில்.

    அங்கு வாழும் மக்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த தேர்தலில் நகர்புறத்தில் பா.ஜனதா 43.2 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 6.2 சதவீதம் குறைவு ஆகும்.

    ஆனால் காங்கிரஸ் 44 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட 2.6 சதவீதம் அதிகம் ஆகும். இதற்கு காரணம் நகர் பகுதியில் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடுகிறார்கள்.

    இதை காங்கிரஸ் கெட்டியாக பிடித்துக் கொண்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்றார்கள். அதை நம்பி நகர்புறத்தின் வாக்குகள் காங்கிரசுக்கு சாதகமாக விழுந்துள்ளது.

    இதேபோல் புறநகர் பகுதிகளில் 10 சதவீதமும், கிராம பகுதிகளில் 4 சதவீதம் வரையிலும் வாக்குசதவீதம் குறைந்துள்ளது. 6 முறை அந்த மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங் அண்மையில் காலமாகிவிட்டார். அவரது மனைவி தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். எனவே அந்த அனுதாபமும் வெற்றியை தேடி கொடுத்திருக்கலாம்.

    தேர்தல் தோல்விக்கான காரணங்களை பா.ஜனதா ஆராய்ந்து வருகிறது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும். முக்கியமாக பிரபலங்கள் சிலர் இரு கட்சிகளிலும் தோற்றுள்ளனர்.

    காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக கருதப்பட்ட ஆஷா குமாரி, தோல்வி அடைந்தார். பா.ஜனதாவை சேர்ந்த ஜெய்ராம் தாக்கூர், ஜெய்ராம் ரமேஷ், வீரேந்திர குமார், அனில் சர்மா ஆகியோரும் வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள்.

    Next Story
    ×