search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாடிக்கையாளர்களின் மின் கட்டணத்தை சில்லறையாக கொடுத்த கவுன்சிலர்
    X

    கவுன்சிலர் கொண்டு வந்த சில்லறை காசுகளை எண்ணும் மின் ஊழியர்கள்


    வாடிக்கையாளர்களின் மின் கட்டணத்தை சில்லறையாக கொடுத்த கவுன்சிலர்

    • வார்டு கவுன்சிலரான ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.
    • கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் மாநிலத்தின் சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள தலவூர் கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் மின்தடை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது தலவூர் கிராம மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதனால் அந்த பகுதியின் வார்டு கவுன்சிலரான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.

    அதன்படி தனது வார்டுக்கு உட்பட்டவர்கள் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை சில்லறை காசுகளாக மாற்றினார். மொத்தம் 9 வாடிக்கையாளர்களின் மின் கட்டணமான ரூ 7 ஆயிரத்துக்கு ரூ,1, ரூ2, ரூ5 நாணங்களாக மாற்றி ஒரு பையில் மூட்டையாக கட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று வழங்கினார்.

    அதனைப்பார்த்த மின் வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் வாடிக்கையாளர்களின் மின் அட்டை மற்றும் சில்லறை காசுகள் அடங்கிய மூட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். அவற்றை வேறு வழியின்றி வாங்கிக்கொண்ட மின் ஊழியர்கள், சில்லறை காசுகள் அனைத்தையும் பல மணி நேரமாக எண்ணினர்.

    பின்பு மின் கட்டணத்துக்கான ரசீதை கவுன்சிலரிடம் கொடுத்தனர். இதுகுறித்து கவுன்சிலர் ரஞ்சித் கூறியதாவது:-

    மின்சார வாரியமும், குடிநீர் வாரியமும் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி எங்களை கஷ்டப்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி எனது வார்டில் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. என்னுடைய வார்டில் தினமும் 20 முறையாவது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

    இன்று 9 வீடுகளின் மின் கட்டணத்தை சில்லறையாக கொண்டு வந்துள்ளேன். இதற்கு பிறகும் எங்களது பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், எனது வார்டில் உள்ள 450 வீடுகளுக்கான மின் கட்டண தொகையையும் நாணயங்களில் கொண்டு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×