search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாடு தழுவிய அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் நுகர்வோர் பாதிப்பு
    X

    நாடு தழுவிய அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் நுகர்வோர் பாதிப்பு

    • உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் தக்காளியின் விலை அதிகபட்சமாக நேற்றைய தினம் கிலோவுக்கு ரூ.121 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
    • உணவுப் பொருள் பதுக்கல் போன்ற செயற்கையான விலை ஏற்றத்தை மத்திய அரசு தினமும் கண்காணித்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய காய்கறிகள், அரிசி, கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றின் விலை கடந்த ஒரு மாதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    கொள்முதல் விலை உயர்ந்துள்ள காரணத்தால் சிறிய அளவிலான டீக்கடைகள் மற்றும் சிறு அளவிலான உணவகங்களை நடத்துபவர்கள் செலவு கணக்குகளை பார்த்து விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

    அத்தியாவசிய 10 முக்கிய உணவுப் பொருட்களில் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை, பால், தேனீர், உப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவை ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளது.

    தேசிய அளவில் உருளைக்கிழங்கு 8.8 சதவீதமும், வெங்காயம் 11.1 சதவீதமும், தக்காளி 2 மடங்கும் விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் விலை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தக்காளியின் தற்போதைய தேசிய சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ.46.1 ஆக உள்ளது. இது ஒரு மாதத்துக்கு முந்தைய விலையான ரூ.23.6-ஐ ஒப்பிடும்போது 95 சதவீதம் அதிகமாக உள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கன்னிமாரா மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது.

    இது தொடர்பாக கோழிக்கோட்டை சேர்ந்த இல்லத்தரசி பிரேமா என்பவர் கூறுகையில், இப்போது நமக்கு ஒரு எளிய ரசம் கூட விலை உயர்ந்த உணவாக மாறிவிட்டது என வருத்தம் தெரிவித்தார்.

    அதேபோன்று உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் தக்காளியின் விலை அதிகபட்சமாக நேற்றைய தினம் கிலோவுக்கு ரூ.121 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு அதிக கோடை வெப்ப நிலை மற்றும் வழக்கத்துக்கு மாறான மழை பொழிவுகள் வடமாநிலங்களில் காய்கறிகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை பாதித்துள்ளது.

    இதுபற்றி வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, நாங்கள் அதிக விலை கொடுத்து காய்கறிகளை கொள்முதல் செய்கிறோம். மேலும் நாங்களும் உயிர் வாழ லாபம் தேவைப்படுகிறது. மலைகளில் பெய்த அபரிமிதமான மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதனால் விவசாயிகளின் பயிர்கள் நாசமாகிவிட்டன என தெரிவித்தனர்.

    மேற்கண்ட விலையேற்றம் தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் செயலாளர் ரோகித்குமார் சிங் கூறுகையில், பருவ கால காரணங்களால் தக்காளி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வானிலை சீர்குலைவுகளால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் உணவுப் பொருள் பதுக்கல் போன்ற செயற்கையான விலை ஏற்றத்தை மத்திய அரசு தினமும் கண்காணித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் தக்காளி விலை குறைவாகவே உள்ளது. அனைத்திந்திய அளவில் தக்காளியின் சராசரி விலை நேற்றைய தினம் ரூ.49 ஆக இருந்தது.

    இந்த பிரச்சனை பெரும்பாலும் டெல்லி பிராந்தியத்தில் அதிகமாக உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இருந்து பொருட்கள் வரத்து தொடங்கியதும் இன்னும் ஏழெட்டு நாட்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார். ஆனால் நாடு முழுவதும் உள்ள நுகர்வோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கூறும் போது, பணம் வீக்கத்தால் வீட்டு வரவு-செலவு திட்டங்கள் மிகவும் பாதிக்கிறது. அவரைக்காய், பீன்ஸ், கத்தரி, கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறான சூழ்நிலையில் உருளைக்கிழங்கு, கீரைகள் மற்றும் வாழைத் தண்டு மற்றும் வாழைப்பூவை மட்டுமே தான் நாங்கள் வாங்கி சாப்பிட முடியும். தக்காளி மட்டுமல்லாமல் அனைத்து காய்கறிகள் மற்றும் பருப்பு விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×