என் மலர்
இந்தியா

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் 'தாலிபான்' அமைச்சர்!
- முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
- தாலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஒரே நாடு ரஷியா மட்டுமே
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
ஆகஸ்ட் 2021 இல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை.
டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தாலிபான்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை முத்தாகி சந்திப்பார் என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஜியா அகமது தகால் தெரிவித்தார்.
இதுவரை தாலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஒரே நாடு ரஷியா மட்டுமே. ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்ட நிலையில் இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் முத்தாகிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






