என் மலர்
இந்தியா

அவையில் எப்படி செயல்பட வேண்டும் என என்னிடம் பயிற்சி எடுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு ஜே.பி. நட்டா பதில்..!
- நான் பேசிக் கொண்டிருக்கும்போது, சிலர் என் அருகே வந்து முழக்கம் எழுப்புகிறார்கள்.
- இது ஜனநாயகம் கிடையாது. அவையை நடத்துவதற்கான முறையான வழி கிடையாது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, "பாராளுமன்ற வளாகத்தில் CISF வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் அவர்களுடைய போராட்ட உரிமைய செயல்படுத்தும்போது, இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளது. இது விசித்திரமானது. அதிர்ச்சி அளிக்கிறது. பாராளுமன்றம் அதன் நிலையை குறைக்கிறதா?. இது மிகவும் ஆட்சேபனைக்குரியது" எனக் கூறியிருந்தார்.
இதற்கு ஜே.பி. நட்டா பதில் அளிக்கையில் "அவை செயல்பாடுகளுக்கு இடையூறு அளிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை தெளிவாக உருவாக்கிவிட்டீர்கள். நான் பேசிக் கொண்டிருக்கும்போது, சிலர் என் அருகே வந்து முழக்கம் எழுப்புகிறார்கள். இது ஜனநாயகம் கிடையாது. அவையை நடத்துவதற்கான முறையான வழி கிடையாது. நான் இங்கே எதிர்க்கட்சியாக பல வருடங்கள் இருந்துள்ளேன். இதனால் எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என என்னிடம் பயிற்சி எடுங்கள் என நான் சொல்லுவேன். ஏனென்றால், அடுத்த 40 வருடத்திற்கு எதிர்க்கட்சியாகத்தான் இருக்கப் போகிறீர்கள்.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.






