search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
    X

    ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    • . தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் ஆகிய மூவரும் ஒருமித்த கருத்தை தீர்ப்பாக வெளியிட்டுள்ளனர்.
    • நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டு உள்ளார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா வேறொரு தீர்ப்பை வழங்கினார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

    சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் ஆகிய மூவரும் ஒருமித்த கருத்தை தீர்ப்பாக வெளியிட்டுள்ளனர். ஆனால் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டு உள்ளார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா வேறொரு தீர்ப்பை வழங்கினார்.

    மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஒட்டுமொத்தமாக சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    தீர்ப்பின்போது தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறியதாகவது:-

    1. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது.

    2. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை.

    3. இந்தியா உடன் இணைந்தபோது இறையாண்மையின் ஒரு பகுதியை தக்க வைத்துக்கொள்வில்லை.

    4. ஜனாதிபதி ஆட்சி நடைபெறும்போது மாற்ற முடியாத அதிகாரத்தை செயல்படுத்தும் நடவடிக்கையை எடுக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.

    5. மத்திய அரசிற்கான அரசியலமைப்பு சட்டம் அனைத்தும் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும்.

    6. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும்போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது.

    7. காஷ்மீருக்கு தனி ஆட்சி உரிமை கிடையாது.

    8. இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு.

    தீர்ப்பு விவரம் வருமாறு:-

    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் என்பது குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். அந்த அவசர சட்டத்துக்கு குறிப்பிட்ட ஆயுள்தான் உண்டு. எனவே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கொண்டு வரப்பட்ட 370-வது சட்டப்பிரிவு தற்காலிக மானதுதான்.

    அந்தக்காலக்கட்டத்தில் போர்ச்சூழல் காரணமாகவே அவசர சட்டம் மூலம் சிறப்பு அந்தஸ்துகொண்டு வரப்பட்டது. அது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    எனவே அந்த அவசர சட்டத்தை ஜனாதிபதி ரத்து செய்தது செல்லும். ஜனாதிபதிக்கு அவசர சட்டத்தை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது. இந்த விசயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை எந்த காரணத்தை கொண்டும் ரத்து செய்ய இயலாது. அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்படி செல்லும்.

    ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். அதற்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சரியானதுதான். இந்த விசயத்தில் ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது.

    அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லுமா? என்று கேள்வி கேட்க முடியாது. ஜனாதிபதி ஆட்சி செல்லுபடியாகுமா? என்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு தனியாக தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இந்த விவகாரத்தில் ஜனாதிபதிக்கு முழுமையாக அதிகாரம் இருக்கிறது.

    மத்திய அரசின் இத்தகைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.

    ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தும் முன்பு அதற்காக ஆலோசனை பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை. ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமும் இல்லை.

    இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மாநில சட்டசபையில் கொண்டு வந்து பரிந்துரைக்கப்படும் எந்த விசயமும் ஜனாதிபதியை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. இதில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கே முழு அதிகாரம் உள்ளது.

    காஷ்மீரை நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக நீடிக்க செய்ய ஜனாதிபதி எடுத்த சட்ட நடவடிக்கைகள் செல்லும். அதன் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு-காஷ்மீருக்கு பொருந்தும்.

    காஷ்மீர் விசயத்தில் மட்டுமின்றி அரசியல் அமைப்பு விதிகளை செயல்படுத்த ஜனாதிபதி மேற்கொள்ளும் எந்த முடிவையும் கேள்வி கேட்க முடியாது. அதன் அடிப்படையில் காஷ்மீரில் இருந்து பிரித்து லடாக்கை தலைமையிடமாக கொண்டு யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது செல்லும். அது தொடர்ந்து செயல்படலாம். அதில் எந்த தவறும் இல்லை.

    அதே சமயத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும். காஷ்மீரில் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

    இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×