என் மலர்
இந்தியா

மத்திய மந்திரி எல்.முருகன் மீதான அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை
- அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய மந்திரி எல்.முருகன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
- 3 மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
புதுடெல்லி:
மத்திய இணை மந்திரி எல்.முருகன், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பஞ்சமி நிலம் குறித்து பேசியிருந்தார்.
இதையடுத்து எல்.முருகன் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய மந்திரி எல்.முருகன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்து, எல்.முருகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், 3 மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மத்திய மந்திரி எல்.முருகன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அளித்து 6 வாரத்துக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது. அவதூறு வழக்கில் 6 வாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.






