என் மலர்tooltip icon

    இந்தியா

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கில் அடுத்தமாதம் இறுதி விசாரணை- சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கில் அடுத்தமாதம் இறுதி விசாரணை- சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

    • கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
    • தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் விஷ்னோயி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.

    அப்போது, வழக்கு விசாரணயை தள்ளிவைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜனவரி 20-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    ஜனவரி 22-ந் தேதி வரை இறுதி விசாரணை நடைபெறும் என அறிவித்த நீதிபதிகள், அதற்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    Next Story
    ×