search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் திடீர் மரணம் மாநிலத்திற்கு பேரிழப்பு-  பினராயி விஜயன் இரங்கல்
    X

    பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் திடீர் மரணம் மாநிலத்திற்கு பேரிழப்பு- பினராயி விஜயன் இரங்கல்

    • 750 படங்களுக்கு மேல் நடித்த இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார்.
    • 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இரிஞ்சாலக்குடாவை சேர்ந்தவர் இன்னசென்ட்.

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் இன்னசென்ட். 1972-ம் ஆண்டு ஷோபனா பரமேஸ்வரன் நாயர் தயாரிப்பில் ஏ.பி.ராஜ் இயக்கிய நிருதசாலா படத்தின் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.

    அதன்பின்பு குணச்சித்திர வேடங்களிலும், நகை ச்சுவை நடிப்பிலும் கொடிகட்டி பறந்தார். 750 படங்களுக்கு மேல் நடித்த இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார்.

    இன்னசென்டிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மெல்ல, மெல்ல நோயில் இருந்து மீண்டார்.

    இந்நிலையில் கடந்த 3-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக இன்னசென்டை உறவினர்கள் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த இன்னசென்டுக்கு நேற்றிரவு சுவாச பிரச்சினையும், மாரடைப்பும் ஏற்பட்டது. இதனால் இன்னசென்ட் மரணம் அடைந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு வயது 75.

    இன்னசென்ட் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் மலையாள திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து சென்றனர். அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர்.

    நடிகர் இன்னசென்ட் உடல் இன்று கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான நடிகர், நடிகைகள், ரசிகர்கள், சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின்பு இன்னசென்ட் உடல் அவரது சொந்த ஊரான இரிஞ்சாலகுடாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை காலை 10 மணிக்கு தாமஸ் பேராலயத்தில் இறுதி சடங்குகள் நடக்கிறது. அதன்பிறகு உடல் அடக்கம் நடைபெறுகிறது.

    மரணம் அடைந்த நடிகர் இன்னசென்ட் சாலக்குடி தொகுதியில் முன்னாள் எம்.பி. ஆவார். 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    அப்போது தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.

    நடிகர் இன்னசென்ட் மரணம் பற்றிய தகவல் அறிந்ததும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்தார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் இன்னசென்டின் மறைவு கேரளாவுக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இன்னசென்ட் நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஆவார். இருவரும் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். இன்னசென்ட் இறந்தாலும் அவர் எப்போதும் என்னுடன் தான் இருப்பார் என மோகன்லால் கூறியுள்ளார்.

    Next Story
    ×