search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல்வர் கெஜ்ரிவாலை விசாரணைக்கு அழைத்த சிபிஐ... டெல்லியில் நாளை மறுநாள் சட்டசபை சிறப்பு கூட்டம்
    X

    முதல்வர் கெஜ்ரிவாலை விசாரணைக்கு அழைத்த சிபிஐ... டெல்லியில் நாளை மறுநாள் சட்டசபை சிறப்பு கூட்டம்

    • சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
    • மத்திய டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ அலுவலகம் அருகில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி கெஜ்ரிவால் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார். முதலமைச்சரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருப்பது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வரிந்துகட்டி நிற்பதாக ஆம் ஆத்மி கட்சி அரசு குற்றம்சாட்டி உள்ளது.

    ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவும் அமைச்சருமான சவுரப் பரத்வாஜ், செய்தியாளர்களிடம் பேசுகையில், 'டெல்லியில் தற்போது நிலைமை சரியில்லை. சட்டசபையில் இதுபற்றி விவாதிக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பது குறித்து தலைவர்கள் பேசுவார்கள்' என்றார்.

    பொய்யான தகவல்களையும் பொய் சாட்சிகளையும் நீதிமன்றங்களில் தெரிவிக்கும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    கெஜ்ரிவால் நாளை காலை 11 மணியளவில், மத்திய டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வர உள்ளார். அந்த சமயத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    Next Story
    ×