என் மலர்
இந்தியா

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் டிரோன் போர் அபாயம்..!
- இந்தியா- பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
- இந்தியாவுக்கு இஸ்ரேல் டிரோன் சப்ளை செய்ததாக கூறும் பாகிஸ்தான், தங்களிடம் துருக்கி டிரோன் உள்ளதாக தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷேன் சிந்தூர் என்ற பெயரில் 07-05-2025 அன்று 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 9 இடங்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் (LoC) பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தன்னிச்சையாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 16 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே இன்று காலை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் 15 இடங்களில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் (Indian Air Force S-400 Sudarshan Chakra air defence missile systems) வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.
அதேவேளையில் இந்தியா பாகிஸ்தானை நோக்கி டிரோன்களை செலுத்தியது. இந்த டிரோன்கள் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி, இஸ்லாமாபாத், சியால்கோட் போன்ற இடங்களை தாக்கியது. இதில் லாகூர் வான் பாதுகாப்பு சிஸ்டம் தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் 25 டிரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகத் துறை {Inter-Services Public Relations (ISPR)} தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியா செலுத்திய இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 25 ஹெரோப் டிரோன்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் இருந்து டிரோன்களின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எதிரிகள் மற்றும் எதிரிகளின் அனைத்து நோக்கங்களையும் அழிக்கும் வகையில் பாகிஸ்தான் படைகள் பதிலடி கொடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
தற்போது டிரோன் போரின் முக்கிய பங்கு வகிக்கும் ஆயுதமாக விளங்குகிறது. ஒரு இலக்கை நோக்கி செலுத்தப்பட்டால் அது மனித வெடிகுண்டு போல் செயல்பட்டு அந்த இடத்தை தாக்கும். அத்துடன் அதன் ஆயுள் முடிந்துவிடும்.
டிரோன்களை எந்த நேரத்தில் எதிரி நாடுகள் பயன்படுத்தும் என்பது தெரியாது. வான் பாதுகாப்பு சிஸ்டம் கண்ணில் மண்ணைத்தூவி தப்பிவிட்டால், அது எங்கு சென்று தாக்கும் எனத் தெரியாது.
அந்த வகையில்தான் பாகிஸ்தான் இன்று காலை இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் இந்தியா வான் பாதுகாப்பு சிஸ்டம் வெற்றிகரமாக இடைமறித்து அவற்றை அழித்துவிட்டது. அதற்கு பதிலடியாக இந்தியா நடத்திய டிரோன் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதத்தை கொடுத்துள்ளது. லாகூர், ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தியா செலுத்திய டிரோன்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா இஸ்ரேலிடம் இருந்து நவீன டிரோன்களை வாங்கியுள்ளது. இந்தியா ஹெரோப் (Herop), காமிகேஸ் (kamikaze drones) டிரோன்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்கியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதில் காமிகேஸ் டிரோன் இரண்டு மணி நேரம் வானத்தில் பறக்கும் திறன் கொண்டது.
அதேவேளையில் துருக்கி பாகிஸ்தானுக்கு டிரோன்களை சப்ளை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவ செய்து தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த டிரோன்களைத்தான் இன்று காலை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.
துப்பாக்கிச்சூடு, ஏவுகணை தாக்குதால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது நிலையில், தற்போது டிரோன் போர் அபாயம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.






