என் மலர்
இந்தியா

மணிப்பூரில் ஹெலிகாப்டர் மூலம் நிவாரண முகாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் ராகுல் காந்தி
- மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர்
- இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் முகாம் இருக்கும் இடத்திற்கு சென்றார்
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். அப்போது அவரை மணிப்பூர் போலீசார் நிவாரண முகாம் செல்ல அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.
தன்னை தடுத்து நிறுத்தியது துரதிர்ஷ்டவசமானது என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். காரில் சென்றால் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தடுத்தி நிறுத்தினோம் என போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார.
இந்த நிலையில் மணிப்பூர் பிஷ்னுபுர் மாவட்டம் மொய்ரங் என்ற பகுதியில் உள்ள இரண்டு நிவாரண முகாமிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இன்று காலை 9.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் இம்பாலில் இருந்து மொய்ரங் சென்றடைந்தார். அங்கு பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை சந்தித்து, அவர்களின் துயரம் குறித்து கேட்டறிந்தார்.
இரண்டு முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த தகவலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
ராகுல் காந்தியுடன் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் ஒக்ரம் இபோபி சிங், பொதுச் செயலாளர் (ஒருங்கிணைப்பு) கே.சி. வேனுகோபால், முன்னாள் எம்.பி. அஜய் குமார் மற்றும் கெய்ஷம் மேகசந்திரா சிங் ஆகியோரும் ராகுல் காந்தியுடன் சென்றிருந்தனர்.






