search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து ராணுவம் நிரூபிக்க தேவையில்லை - ராகுல் காந்தி
    X

    ராகுல் காந்தி

    சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து ராணுவம் நிரூபிக்க தேவையில்லை - ராகுல் காந்தி

    • சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்றார் திக்விஜய் சிங்.
    • சர்ஜிகல் தாக்குதல் பற்றி அவர் சந்தேகம் கிளப்பியது பல்வேறு வகையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் 4 பேர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக அதே ஆண்டின் செப்டம்பர் 28-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியது என மத்திய அரசு தெரிவித்தது.

    இதற்கிடையே, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் அவருடன் இணைந்து பாதயாத்திரையில் பங்கேற்றனர். அப்போது பேசிய திக்விஜய் சிங், காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் குறித்த அறிக்கை இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சர்ஜிகல் தாக்குதல் நடத்தினோம் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுகிறது. ஆனால், அதற்கான ஆதாரம் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. பா.ஜ.க. அரசு அடுக்கடுக்கான பொய்களை மட்டுமே கூறி ஆட்சி செய்து வருகிறது என கூறினார்.

    சர்ஜிகல் தாக்குதல் பற்றி அவர் சந்தேகம் கிளப்பியது பல்வேறு வகையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு அவர் சான்று கேட்பது இந்திய வீரர்களை அவமதிக்கும் மற்றும் கொச்சைப்படுத்தும் விவகாரம் ஆகும் என பா.ஜ.க. எதிர்ப்பு குரல் எழுப்பியது.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திக்விஜய் சிங்கின் தனிப்பட்ட பார்வைகளை நாங்கள் ஏற்று கொள்ளவில்லை. அவரது கருத்துகள் ஒதுக்கப்பட வேண்டியவை. ராணுவ வீரர்கள் தங்களது பணியை திறம்பட செய்துள்ளனர் என்பதில் நாங்கள் முழு அளவில் தெளிவாக இருக்கிறோம். அதற்கு வீரர்கள் சான்றளிக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்தார்.

    Next Story
    ×