என் மலர்
இந்தியா

ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னரை மருத்துவமனையில் சந்தித்த ராகுல் காந்தி
- சத்யபால் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- அவரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் நேரில் சென்று சந்தித்தார்.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி வரை சத்யபால் மாலிக் கவர்னராக பதவி வகித்தார். அப்போது ரூ.2,200 கோடி மதிப்பிலான கிரு நீர் மின் திட்ட கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைப்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில் தனியார் நிறுவன முன்னாள் தலைவர் நவீன்குமார் சவுத்ரி, பிற அதிகாரிகளான பாபு, மிட்டல், மிஸ்ரா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு எப்.ஐ.ஆர் பதிவுசெய்து சிபிஐ, சத்யபால் மாலிக்குக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வழக்கில் தொடர்புடைய பிறருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சோதனை நடத்தியது.
இந்த ஊழல் வழக்கு தொடர்பாக சத்யபால் மாலிக் உள்பட 8 பேருக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டு நடந்த விசாரணைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் சத்யபால் மாலிக், அவரின் இரு உதவியாளர்களான வீரேந்தர் ராணா, கன்வர் சிங் ராணா உள்பட 8 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கடந்த 11-ம் தேதி சத்யபால் மாலிக்கிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யபால் மாலிக்கின் இரு சிறுநீரங்களும் செயல் இழந்துவிட்டன. ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்யபால் மாலிக்கை நேற்று சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.






