என் மலர்
இந்தியா

'நீட் முறைகேடு' - பாராளுமன்றத்தில் விவாதம் கோரி பிரதமருக்கு ராகுல் கடிதம்
- இரண்டு அவைகளிலும் கடந்த 28-ந்தேதி எதிர்க்கட்சிகள் கோரிக்கைகள் மறுக்கப்பட்டன.
- அரசுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதாக மக்களவை சபாநாயகர் உறுதி அளித்துள்ளார்.
நீட் தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 24 லட்ச மாணவர்கள் எழுதிய நிலையில் பேப்பர் லீக்கானதாக புகார் வெளியானது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு பேப்பர் லீக்கை எதிர்க்கட்சிகள் ஊழல் மோசடி எனக் குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நீட் தொடர்பாக நாளை விவாதம் நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Dear Prime Minister,I am writing to request for a debate in Parliament on NEET tomorrow. Our aim is to engage constructively in the interest of 24 lakh NEET aspirants who deserve answers. I believe that it would be fitting if you were to lead this debate. pic.twitter.com/PXqV8LnYVO
— Rahul Gandhi (@RahulGandhi) July 2, 2024
அந்த கடிதத்தில் நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் பேரின் நலனில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவதே எங்கள் நோக்கம். இந்த விவாதத்திற்கு நீங்கள் தலைமை ஏற்றால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தக் கடிதம் எதற்காக என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி எழுதுகிறேன். ஜூன் 28-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.
இந்த விவகாரம் குறித்து மீண்டும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நேற்று கோரிக்கை விடுத்தன. மக்களவை சபாநாயகர் இந்த விவகாரம் குறித்து அரசுடன் ஆலோசிப்பதாக எதிர்க்கட்சிகளுக்கு உறுதியளித்தார்.
முன்னோக்கி செல்லும் வழியைக் கண்டறிய ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவதே எங்கள் நோக்கம். இந்த நேரத்தில், எங்களின் ஒரே கவலை இந்தியா முழுவதும் உள்ள நீட் தேர்வு எழுதிய கிட்டத்தட்ட 24 லட்சம் பேரின் நலன் மட்டுமே.
லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை ஆதரிப்பதற்காக மிகப்பெரிய தனிப்பட்ட தியாகங்களைச் செய்துள்ளன. பலருக்கு பேப்பர் கசிவு என்பது வாழ்நாள் கனவிற்கு துரோகம்.
இன்று இந்த மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் அவர்களின் மக்கள் பிரதிநிதிகளான எங்களிடம், பிரச்சனைக்கு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
நீட் தேர்வு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனென்றால் அது நமது உயர்கல்வி அமைப்பை சிதைககும் மோசமான நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் 7-0க்கும் மேற்பட்ட பேப்பர் லீக்கால் 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற தேர்வுகளை ஒத்திவைத்து, தேசிய தேர்வு முகமையின் டைரக்டர் ஜெனரலை மாற்றும் அரசின் நடவடிக்கை சீர்குலைவை மறைக்கும் நடவடிக்கையாகும்.
எங்கள் மாணவர்கள் பதில்களுக்கு தகுதியானவர்கள். அவர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மீட்டெடுப்பதற்கும் பாராளுமன்ற விவாதம் முதல் படியாகும். இந்த விவகாரத்தின் அவசரம் கருதி, நாளை அவையில் விவாதம் நடத்துவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களின் நலன் கருதி நீங்கள் இந்த விவாதத்தை நடத்தினால் அது பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு ராகுல் காந்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.