என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு
    X

    ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

    • மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் குற்றவியல் அவதூறு வழக்கு
    • குஜராத் உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.-யுமான ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க இயலாது என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

    இதனால் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தை நாட உள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன் தனது வாதத்தையும் கேட்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக,

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். அதை எதிர்த்து சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்தார்.

    ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதையடுத்து குஜராத் ஐகோர்ட்டை ராகுல் காந்தி நாடினார். கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த நிலையில் குஜராத் ஐகோர்ட்டு கடந்த 7-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது:-

    ராகுல் காந்தி மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நாடு முழுவதும் நிலுவையில் உள்ளன. புனே கோர்ட்டில் சாவர்கர் மகன் தொடுத்துள்ள மனுவும் நிலுவையில் இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு சரியானதுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அந்த தீர்ப்பில் ஐகோர்ட்டு தலையிட முடியாது.

    மேலும் இந்த வழக்கில் 2 ஆண்டு தண்டனை விதிப்பது என்பது நியாயமானதும் கூட. சரியானது. சட்டபூர்வமான ஒன்றாகவும் இதை கருதலாம். 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கேட்ட மனுதாரர் அதற்கு உரிய காரணங்களை குறிப்பிடவில்லை. அவர் தெரிவித்துள்ள காரணங்களை கோர்ட்டால் ஏற்க இயலாது. எனவே ராகுலின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க இயலாது.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    Next Story
    ×