என் மலர்
இந்தியா

ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா: ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம்
- ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.;
- இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘புதிய பாரதம்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தினம் 'புதிய பாரதம்' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
உலகின் மிகப் பழமையான குடியரசுகளைக் கொண்டிருந்தது இந்தியா. இது ஜனநாயகத்தின் தாய் என ஒப்புக் கொள்ளப்படுகிறது.
சுதேசி என்ற கருத்து, மேக்-இன்-இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற முயற்சிகள் நமது தேசிய நோக்கங்களுக்கு உத்வேகம் அளித்து வருகின்றன. இந்திய பொருட்களை வாங்கிப் பயன்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். உள்ளூர் பொருட்களை மக்கள் உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது சுதேசி இயக்கத்தின் பாரம்பரியத்தை மதிக்கும் செயலாகும்.
இந்த மாத தொடக்கத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி, நமது நாடு தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடியது. இது நாட்டின் நெசவாளர்களையும் அவர்களின் தயாரிப்புகளையும் கவுரவிப்பதற்காக 2015 முதல் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியமாகும். 1905-ம் ஆண்டு நமது சுதந்திரப் போராட்டத்தின்போது தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் இந்த நாளை கொண்டாடி வருகிறோம்.
இந்திய பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் நாம் உறுதி ஏற்போம். நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மிகவும் வறுமையில் இருந்தது. அதன்பின் 78 ஆண்டுகளில், அனைத்துத் துறைகளிலும் நாம் அசாதாரண முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியா சுயசார்பு தேசமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது, மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.
காலநிலை மாற்றத்தின் சவாலுக்கு பதிலளிக்க நாமும் மாறவேண்டும். நமது பழக்கவழக்கங்களையும் நமது உலகக் கண்ணோட்டத்தையும் மாற்ற வேண்டும். நம் அனைவரின் பங்களிப்புடன், இயற்கையான முறையில் செழிப்பான வாழ்க்கையை வழங்கும் ஒரு கிரகத்தை எதிர்கால சந்ததியினருக்காக விட்டுச் செல்வோம் என தெரிவித்தார்.






