என் மலர்
இந்தியா

பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்ட காத்திருக்கும் பாகிஸ்தான் பெண்
- கடந்த ஆண்டு கமர் மொஹ்சின் ஷேக்கால் டெல்லிக்கு செல்ல முடியவில்லை.
- எனது கணவருடன் டெல்லி சென்று பிரதமரின் மணிக்கட்டில் எனது கையால் செய்யப்பட்ட ராக்கியை கட்டுவேன்.
புதுடெல்லி:
சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா வருகிற 9-ந் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் சகோதரர்களுக்கு, சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்துவது வழக்கம்.
பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த கமர் மொஹ்சின் ஷேக் என்ற பெண், 1981-ம் ஆண்டு தனது திருமணத்திற்கு பின் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். குஜராத்தின் அகமதாபாத்தில் குடியேறிய அவர் ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷாபந்தன் தினத்தில் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி வருகிறார்.
பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்து 30 ஆண்டுகளாக, கமர் மொஹ்சின் ஷேக் ராக்கி கயிறு கட்டி வருகிறார்.
அவர் இந்த ஆண்டும் மோடிக்கு ராக்கி கயிறு கட்டுவதற்காக ஓம் மற்றும் விநாயகர் வடிவங்களுடன் 2 ராக்கிகளை வீட்டிலேயே தயார் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் ஒருபோதும் சந்தையில் இருந்து ராக்கிகளை வாங்குவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் வீட்டிலேயே ராக்கிகளை தயாரித்து பிரதமர் மோடிக்கு கட்டுவேன் என்றார்.
கடந்த ஆண்டு கமர் மொஹ்சின் ஷேக்கால் டெல்லிக்கு செல்ல முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரும் என காத்திருக்கிறேன். அழைப்பு வந்ததும் எனது கணவருடன் டெல்லி சென்று பிரதமரின் மணிக்கட்டில் எனது கையால் செய்யப்பட்ட ராக்கியை கட்டுவேன். பிரதமர் 4-வது முறையாக பதவியேற்பதையும் காண விரும்புகிறேன் என்றார்.






