search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி, அதானியை பாதுகாப்பது உறுதியாகி இருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
    X

    பிரதமர் மோடி, அதானியை பாதுகாப்பது உறுதியாகி இருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    • அதானி ஜி மீது எங்களுக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை.
    • அம்பானி ஜி மீதும் தனிப்பட்ட முறையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

    புதுடெல்லி :

    அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசும்போது இந்த பிரச்சினையை எழுப்பிய அவர், மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளையும் அடுக்கினார்.

    இந்த நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்தார்.

    ஆனால் பிரதமரின் இந்த உரையில், தனது கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெறவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-

    அதானி விவகாரத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    பிரதமர் அதிர்ச்சியில் இருந்தார், பதில் இல்லை. நான் எந்த சிக்கலான கேள்வியும் கேட்கவில்லை. அவர் (அதானி) உங்களுடன் எத்தனை முறை சென்றிருக்கிறார் என்றுதான் கேட்டேன். அவர் உங்களை எத்தனை முறை சந்தித்தார் என்பன போன்ற எளிய கேள்விகளைத்தான் முன்வைத்தேன். ஆனால் பதில் கிடைக்கவில்லை

    அதேநேரம் அவர் ஆற்றிய உரை எனக்கு திருப்தி அளிக்கவில்லை, ஆனால் உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அதாவது அதானி விவகாரத்தில் விசாரணை குறித்து எந்த பதிலும் இல்லை.

    பிரதமர் மோடிக்கு, அதானி நண்பர் இல்லை என்றால், அவர் விசாரணைக்கு ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு துறையில் போலி நிறுவனங்கள், பினாமி பணம் கைமாறியது குறித்து விசாரணை இல்லை. இது குறித்து பிரதமர் மோடி எதுவும் கூறவில்லை.

    இதன் மூலம் பிரதமர் மோடி, அதானியை பாதுகாத்து வருவது உறுதியாகி இருக்கிறது.

    இது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு பிரச்சினை ஆகும். எனவே இந்த பிரச்சினையில் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருக்க வேண்டும்.

    இது ஒரு மிகப்பெரிய ஊழல். ஆனால் மோசடி என்று கூட பிரதமர் மோடி சொல்லவில்லை. அவர் நிச்சயமாக அதானியை பாதுகாக்க முயற்சிக்கிறார். அதை நான் புரிந்து கொண்டேன். அதன் பின்னால் காரணங்களும் உள்ளன.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    இதற்கிடையே மக்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அதானி, அம்பானி ஆகியோர் மீது காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நாடு வளர வேண்டும், அதிக தொழிலதிபர்கள் உருவாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதானி ஜி மீது எங்களுக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அதைப்போல அம்பானி ஜி மீதும் தனிப்பட்ட முறையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்பதை வெளிப்படையாக கூறிக்கொள்கிறேன்' என்று கூறினார்.

    Next Story
    ×