என் மலர்
இந்தியா

பாஜக எனும் துர்நாற்றத்தை மக்கள் அகற்ற வேண்டும்.. அகிலேஷ் கருத்துக்கு யோகி ஆதித்யநாத் கொடுத்த பதில்
- அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.
- தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக கட்சிக்கும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக்கும் இடையில் கருத்து மோதல் வலுத்துள்ளது.
சமீபத்தில் தனது சொந்த தொகுதியான கன்னோஜில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ், கன்னோஜ் தொகுதி எப்போதும் சகோதரத்துவத்தின் நறுமணத்தை பரப்பியுள்ளது. கன்னோஜ் மக்கள், இந்த பாஜக துர்நாற்றத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அவர்கள் (பாஜக) துர்நாற்றத்தை விரும்புகிறார்கள், அதனால் தான் அவர்கள் பசுத் தொழுவங்களை கட்டுகிறார்கள்.
ஆனால், எங்களுக்கு வாசனை திரவியம் பிடிக்கும், அதனால் தான் நாங்கள் இங்கு ஒரு வாசனை திரவிய பூங்காவைக் கட்டினோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக தங்கள் அரசாங்கத்தால் கட்டப்பட்ட வாசனை திரவிய பூங்காயும், தற்போது பாஜக அரசால் அதிகளவில் கட்டப்பட்டுவரும் பசுத்தொழுவங்களையும் ஒப்பிட்டு அவர் இவ்வாறு பேசியிருந்தார்.
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் இதற்கு பதிலடி கொடுத்தார்.
அவர் கூறியதாவது, சமாஜ்வாதியினர் பசுவின் சாணம் நாற்றமடிப்பதாக கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால் பசுவதை செய்வோருடன் அவர்கள் பசுக்களை கொடுத்து வந்தனர்.
பசுக்கடத்தல், பசுவதை செய்வோருக்கும் சமாஜ்வாதியினருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாங்கள் பசுவதை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்ததால் தற்போது சமாஜ்வாதியினர் எங்களை கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.
அவர்களுக்கு பசுவின் சாணம் நாற்றமடிகிறது. ஆனால் தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை. அதனால்தான் கோமாதாவுக்கு சேவை செய்வதை அவர்களின் தலைவர் (அகிலேஷ் யாதவ்) நாற்றமாக நினைக்கிறார் என்று தெரிவித்தார்.






