என் மலர்
இந்தியா

4-வது நாளாக எல்லைப் பகுதியில் அத்துமீறிய பாகிஸ்தான் வீரர்கள்.. பதிலடி கொடுத்த இந்தியா
- தொடர்ந்து வெள்ளி, சனிக்கிழமைகளிலும் இரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டனர்.
- கடந்த 3 நாட்களை விட நேற்று அவர்களது துப்பாக்கி சூடு சற்று அதிகமாக இருந்தது.
பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் 27 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.
இதற்கிடையே சர்வதேச எல்லைக்கோடு கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆங்காங்கே துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்தியா தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளி, சனிக்கிழமைகளிலும் இரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டனர்.
பயம் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. அவர்கள் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லையில் இந்திய நிலைகள் மீது குறி வைத்து துப்பாக்கியால் சுடுகிறார்கள்.
நேற்று இரவு 4-வது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். கடந்த 3 நாட்களை விட நேற்று அவர்களது துப்பாக்கி சூடு சற்று அதிகமாக இருந்தது.
குறிப்பாக பூஞ்ச், குப்பு வாரா மாவட்டங்களில் பாகிஸ்தான் வீரர்களின் அத்துமீறல் நேற்று இரவு அதிகமாக இருந்தது. இன்று அதிகாலை வரை அந்த அத்துமீறல் நீடித்தது.
இந்தியா தரப்பில் அவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய தரப்பில் எந்த சேதமும் இல்லை என்று பாதுகாப்பு படையினர் அறிவித்துள்ளனர்.






