search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுகேஷ் சந்திரசேகரிடம் ஆம் ஆத்மி ரூ.10 கோடி பறித்ததா?: வெடித்தது புதிய சர்ச்சை
    X

    சுகேஷ் சந்திரசேகர், சத்யேந்திர ஜெயின்

    சுகேஷ் சந்திரசேகரிடம் ஆம் ஆத்மி ரூ.10 கோடி பறித்ததா?: வெடித்தது புதிய சர்ச்சை

    • குஜராத்தில் இப்போது பா.ஜ.க. மோசமான நிலையில் உள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஊழல் கட்சி.

    புதுடெல்லி :

    தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு பெற்றுத்தர ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்.

    இவர் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், "ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்யேந்திர ஜெயின், 2019-ம் ஆண்டு, எனக்கு சிறையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என்னை மிரட்டி ரூ.10 கோடி பணம் பெற்றார்" என்ற குற்றச்சாட்டை 3 ஆண்டுகளான நிலையில் இப்போது எழுப்பி உள்ளார்.

    இது குறித்து சிறையில் இருந்தவாறு சுகேஷ் சந்திரசேகர், டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு ஒரு கடிதம் எழுதி, அந்த கடிதத்தை தனது வக்கீல் அசோக் சிங் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளார் என தகவல்கள் வெளியாகி புதிய சர்ச்சை வெடித்து உள்ளது.

    இதுபற்றி டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "குண்டர் வீட்டில் குண்டர் நடமாட்டம் நடந்துள்ளதாக செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. அந்த குண்டரின் பெயர் சுகேஷ் சந்திரசேகர். அவரை ஏமாற்றியவர் ஆம் ஆத்மி கட்சி தலைவர் சத்யேந்திர ஜெயின். இவர் மிரட்டி பணம் பறித்துள்ளார். இது ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஊழல் கட்சி என காட்டுகிறது" என சாடினார்.

    இதற்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளிக்கையில், "மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் செயல் இது" என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, "பஞ்சாப் தேர்தலுக்கு முன்பாக குமார் பிஷ்வாஸ் மீது குற்றச்சாட்டு கூறினார்கள். குஜராத்தில் இப்போது பா.ஜ.க. மோசமான நிலையில் உள்ளது. இப்போது சுகேஷ் கதையை உருவாக்கி உள்ளனர்" என குறிப்பிட்டார்.

    Next Story
    ×