search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மீண்டும் மோடி அரசு அமையும், ஆனால்... கருத்து கணிப்பு கூறுவது என்ன?
    X

    மீண்டும் மோடி அரசு அமையும், ஆனால்... கருத்து கணிப்பு கூறுவது என்ன?

    • கிழக்கு மண்டலத்தில் உள்ள 153 இடங்களில் 80 முதல் 90 இடங்களை பா.ஜனதா கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும்,
    • தெற்கு மண்டலத்தில் 132 இடங்களில் 20 முதல் 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    2014 மற்றும் 2015-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் பா.ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, பிரதமாக பதவி ஏற்றார். தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக இருந்து வருகிறார்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலிலும் இவர்தான் பா.ஜனதா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட இருக்கிறார். 2014-ல் கூட்டணியுடன் ஆட்சி அமைத்த பா.ஜனதா, 2019-ல் தனிப்பெரும்பான்மை பெற்றது.

    2024-ல் கூடுதல் இடங்களை பிடித்து வெற்றிபெற வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது. அதேவேளையில் மோடி தலைமையிலான மத்திய அரசை இந்த முறை வீழ்த்தவில்லை என்றால், பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மிகவும் கடினம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.

    இதனால் சுமார் 28 கட்சிகள் சேர்ந்து "இந்தியா கூட்டணி" என்பதை அமைத்துள்ளன. இருந்தபோதிலும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படாமல் கூட்டணிக்குள் தனித்தனியே பிரச்சனை இருந்துதான் வருகிறது.

    இதற்கிடையே மக்களவை தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் பா.ஜனதாவுக்கு சாதகமாக இருந்து வருகின்றன. தற்போது ஐந்து மாநில தேர்தல் பா.ஜனதாவுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக உள்ளது.

    இந்த நிலையில் ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 295 முதல் 335 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியா கூட்டணி 165 முதல் 205 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பீகார், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை விட ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்இந்தியாவில் இந்தியா கூட்டணிதான் ஆதிக்கம் செலுத்தும். பா.ஜனதாவுக்கு கடும் சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    கடந்த டிசம்பர் 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்டோரிடம் மாநில அளவில் கருத்து கேட்கப்பட்டு இந்த கணிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட அனைவரும் வாக்காளர்கள் எனவும், 543 இடங்களிலும் 13,115 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

    கிழக்கு மண்டலத்தில் உள்ள 153 இடங்களில் 80 முதல் 90 இடங்களை பா.ஜனதா கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், வடக்கு மண்டலத்தில் 180 இடங்களில் 150 முதல் 180 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் 78 இடங்களில் 45 முதல் 55 இடங்களை கைப்பற்றும் எனவும், தெற்கு மண்டலத்தில் 132 இடங்களில் 20 முதல் 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    மத்திய பிரதேசம் (27-29), சத்தீஸ்கர் (9-11), ராஜஸ்தான் (23-25), உத்தர பிரதேசம் (73-75) பா.ஜனதா கூட்டணி அதிக அளவில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் கூட பா.ஜனதா கை ஓங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 23 முதல் 25 இடங்களையும், பா.ஜனதா 16 முதல் 18 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடியின் பணி திருப்பிகரமாக இருப்பதாக 47.2 பேர் ஆதரவு அளித்துள்ளனர். 30.2 சதவீதம் பேர் மிகவும் திருப்தி, 21.3 சதவீதம் பேர் திருப்தியில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

    பெரும்பாலானோர் 2024 தேர்தல் வரை இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செல்லாது எனவும் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×