search icon
என் மலர்tooltip icon

  இந்தியா

  சிறை செல்ல பயப்பட மாட்டேன்- ராகுல் காந்தி ஆவேச பேட்டி
  X

  சிறை செல்ல பயப்பட மாட்டேன்- ராகுல் காந்தி ஆவேச பேட்டி

  • அதானி ஊழலில் ஈடுபட்டது நாட்டுக்கே தெரியும்.
  • பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு. எனக்கு எந்த கவலையும் இல்லை.

  புதுடெல்லி:

  மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

  இதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  இந்த நிலையில் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட பிறகு ராகுல்காந்தி முதல் முறையாக இன்று மதியம் 1 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  பிரதமர் மோடி, தொழில் அதிபர் அதானி இடையேயான தொடர்புகள் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டேன். பாராளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதன் எதிரொலியை உணருகிறேன். தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன்.

  நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக இதற்கு முன்பு நான் பலமுறை தெரிவித்துள்ளேன். அதானி குழுமம் தொடர்பாக நான் கேள்வி எழுப்பியதால் தான் பிரச்சினைகள் தொடங்கின.

  ராணுவம், விமானத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடனேயே முன் வைக்கிறேன். பா.ஜ.க. மந்திரிகள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

  பிரதமர் மோடி, தொழில் அதிபர் அதானி இடையேயான தொடர்புகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். பல போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழும முதலீடுகள் நடைபெற்று உள்ளன. அதானி குழும முதலீடுகளில் சீன நபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது.

  ஜனநாயகம் பற்றி பேசும் பா.ஜ.க. அரசு, மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. இந்திய அரசுக்கு எதிராக நான் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை கேட்டதாக கூறுவது முற்றிலும் தவறு.

  மோடி-அதானி உறவு குறித்து நான் கேள்வி கேட்பதை நிறுத்த போவதில்லை. பாராளுமன்றம், ஊடகங்களின் தரவுகளின் அடிப்படையிலேயே நான் கேள்வி எழுப்பினேன்.

  ஜனநாயகத்துக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். எனது குரலை ஒடுக்க முடியாது. எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டேன். அதானி நிறுவனங்களில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்தது யார்? யாருடைய பணம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு பதில் தேவை.

  என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மக்களிடம் நியாயம் கேட்பேன். என் மீது வன்முறையை கட்டவிழ்த்தாலும், என்னை சிறையில் அடைத்தாலும் அஞ்ச மாட்டேன்.

  நான் இந்தியாவை எந்த இடத்திலும் இழிவுபடுத்தி பேசவில்லை. பா.ஜ.க.வினர் பொய் சொல்கின்றனர். அதானி பற்றி அடுத்த கேள்வி கேட்பதை தடுக்கவே என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர். அதானி பற்றி நான் பேசுவதை கண்டு பிரதமர் மோடி பயப்படுவதை அவரது கண்களில் பார்த்துள்ளேன்.

  வயநாடு தொகுதி மக்களுடன் எனது குடும்பம் போன்ற நெருங்கிய தொடர்பு எனக்கு உள்ளது. என்னை தேர்தலில் போட்டியிட அனுமதிக்காவிட்டாலும் எனது பணிகளை தொடர்ந்து செய்வேன். நான் பாராளுமன்றத்திற்கு உள்ளேயோ, வெளியேயோ இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை.

  அதானி ஊழலில் ஈடுபட்டது நாட்டுக்கே தெரியும். தொழில் அதிபர் ஒரு ஊழல் நபர் என்பது மக்களின் மனதில் பதிந்துள்ளது. ஊழல் தொழில் அதிபரை பிரதமர் மோடி ஏன் காப்பாற்றுகிறார் என மக்கள் யோசிக்க தொடங்கி உள்ளனர்.

  எனக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும். தேசத்தின் ஜனநாயக கட்டமைப்பை பிரதமர் மோடி சிதைக்க பார்க்கிறார்.

  பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு. எனக்கு எந்த கவலையும் இல்லை. அதானி நிறுவன முதலீடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் கேள்வி எழுப்பாதது ஏன்?

  இங்கிலாந்தில் பேசியதற்காக மன்னிப்பு கேட்கலாமே என்கிறார்கள். ஆனால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் சாவர்க்கர் அல்ல. எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  மக்களவையில் எனது குரலை நசுக்கினாலும் மக்களுக்காக எனது குரல் தொடரும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×