என் மலர்
இந்தியா

சித்தராமையாவுக்கு தேசிய பதவி?.. அப்போ முதல்வர் நாற்காலி?- டி.கே. சிவகுமார் விளக்கம்
- டிகே சிவகுமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- பாஜக இதை சித்தராமையாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முன்னேற்பாடு என்று கூறி வருகிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் தேசிய OBC ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சித்தராமையா பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஒரு முக்கிய தலைவராக இருப்பதால், கட்சி அவரது தலைமைத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது என்று டிகே சிவகுமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வரும் ஜூலை 15 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் தேசிய அளவிலான OBC குழு கூட்டத்திற்கு சித்தராமையா தலைமை தாங்குவார் என்று அவர் கூறினார்.
"அவர் அதிகாரப்பூர்வமாக குழுவின் தலைவர் அல்ல என்றாலும், அவர் தேசிய அளவில் செல்வாக்கு மிக்க தலைவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அமைப்பிற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி அவரது தலைமைத்துவத்தையும் திறன்களையும் பயன்படுத்துகிறது" என்று சிவகுமார் தெரிவித்தார்.
முதல்வர் பதவிக்கு டி.கே. சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் குறித்த கேள்விக்கு, "தற்போது முதல்வர் பதவி காலியாக இல்லை. எனவே, இது போன்ற விஷயங்களைப் பற்றி விவாதிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல" என்று பதிலளித்தார்.
சித்தராமையா OBC குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதை காங்கிரஸ் மறுத்தபோதிலும், பாஜக இதை சித்தராமையாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முன்னேற்பாடு என்று கூறி வருகிறது.






