search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நானும், என் மனைவியும் ஆபத்தில் இருக்கிறோம்: வேறு சிறைக்கு மாற்றுமாறு சுகேஷ் சந்திரசேகர் கெஞ்சல்
    X

    நானும், என் மனைவியும் ஆபத்தில் இருக்கிறோம்: வேறு சிறைக்கு மாற்றுமாறு சுகேஷ் சந்திரசேகர் கெஞ்சல்

    • சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள்.
    • சிறையில் என்னை உடல்ரீதியாக தாக்கினார்கள்.

    புதுடெல்லி :

    தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கு, தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர் சுகேஷ் சந்திரசேகர். இவரும், இவருடைய மனைவி லீனா பவுலோசும் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். தென் மாநிலங்களில் கட்சிக்கு ஆட்கள் சேர்க்க ரூ.500 கோடி தருமாறு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கேட்டதாகவும், தனக்கு மாநிலங்களவை பதவி வழங்க ரூ.50 கோடி அவர் பெற்றதாகவும், சிறையில் தனது பாதுகாப்பு மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடி, சிறைத்துறை டி.ஜி.பி. ரூ.12.5 கோடி பெற்றதாகவும் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த பண பரிமாற்ற விவகாரங்கள் டெல்லி போக்குவரத்துத்துறை மந்திரி கைலாஷ் கெலாட் வீட்டில் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவாலும், அமைச்சர்களும் மறுத்தனர். தேர்தலுக்காக பா.ஜனதா நடத்தும் வேலை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும், தான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை இல்லையெனில் தன்னை தூக்கிலிடலாம், மாறாக உண்மை என்றால் கெஜ்ரிவால் என்ன செய்வார்? என்றும் சுகேஷ் சந்திரசேகர் சவாலாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கிடையே, தனது குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கவும் கவர்னரை வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் அவர் தன் வக்கீல் அசோக் கே.சிங் மூலம் கவர்னருக்கு மேலும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக மிக முக்கியமான ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன். இதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால் எனக்கும், என் மனைவிக்கும் தீங்கு விளைய நேரிடும். இதற்கிடையே எனக்கு சமரச தூது வருகிறது. சமரசம் ஆகாவிட்டால் சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள். 2 நாட்களுக்கு முன்புகூட சிறையில் என்னை உடல்ரீதியாக தாக்கினார்கள். எனவே, நீதியின் நலனுக்காக இதில் விசாரணை முடியும்வரை என்னையும், என் மனைவியையும் டெல்லிக்கு வெளியே உத்தரபிரதேசம், அரியானா அல்லது உத்தரகாண்டில் உள்ள சிறைக்கு மாற்றுங்கள். நாங்கள் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறோம்" என்று கெஞ்சலாக சுகேஷ் சந்திரசேகர் கேட்டுள்ளார்.

    இந்த தகவல்களை அவருடைய வக்கீல் நேற்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×