search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுமிகளை தவறாக தொட்டார்.. வெட்கக்கேடான செயல்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்
    X

    சிறுமிகளை தவறாக தொட்டார்.. வெட்கக்கேடான செயல்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்

    • சிறுமிகளை அன்புடன் பொதுவெளியில் சந்தித்ததாக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் விளக்கம்
    • தவறாக சித்தரிக்கும் வகையில் இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளதாக மாநில அமைச்சர் கண்டனம்.

    மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கவுரிசங்கர் பிசென், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் சிறுமிகளை தவறான கண்ணோட்டத்துடன் தொடுவதாக குற்றஞ்சாட்டி இது சம்மந்தமாக ஒரு வீடியோவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் ட்வீட் செய்து பகிர்ந்தனர்.

    மத்தியபிரதேச காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்தியில் இருக்கும் இந்த வீடியோவை வெளியிட்டு, இது "வெட்கக்கேடான செயல்" என தெரிவித்து, பிசெனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    பாலாகாட் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

    ஆனால், இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த பா.ஜ.க., சிறுமிகள் தொடர்பான வீடியோவை ட்வீட் செய்ததற்காக எதிர்க்கட்சியான காங்கிரஸை கண்டித்ததுடன், இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது.

    மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா கூறும்போது, "இந்த சிறுமிகள் அவரது (பிசென்) பேத்தியின் வயதுடையவர்கள். பிசென், அவர்களை அன்புடன் பொதுவெளியில் சந்திக்கிறார்" என கூறினார்.

    மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சரும், அரசின் செய்தித்தொடர்பாளருமான நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், "இது காங்கிரஸின் கீழ்த்தரமான மனநிலையை பிரதிபலிக்கிறது. கேவலமான அரசியலின் காரணமாகவே, பெண்கள் மீதான அவரது (பிசென்) பாசத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் வீடியோவை காட்டிய விதம் வெட்கக்கேடானது. குறிப்பாக சிறுமிகளின் அடையாளத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்சினையை நாங்கள் சட்டப்பூர்வமாக அணுகுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்," என்றார்.

    Next Story
    ×