search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவோம்: ராகுல்காந்தி உறுதி
    X

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவோம்: ராகுல்காந்தி உறுதி

    • ரப்பர் தோட்டா சுட்டதால் முகம் சிதைந்த ஒரு விவசாயியை நான் சந்தித்தேன்.
    • மத்திய அரசின் செயலாளர்களில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர்.

    அவுரங்காபாத்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நடத்தி வருகிறார். ஒருநாள் ஓய்வுக்கு பிறகு, நேற்று பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் அவரது யாத்திரை நடந்தது.

    அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    விவசாயிகள் தங்கள் விளைபொருட்களின் குறைந்தபட்ச விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் கேட்டு டெல்லி நோக்கி செல்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக போராட்டத்தை மோடி அரசு நசுக்கி வருகிறது.

    போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. கண்ணீர்புகை குண்டுகளை வீசுகிறார்கள். ரப்பர் தோட்டாக்களால் சுடுகிறார்கள். ரப்பர் தோட்டா சுட்டதால் முகம் சிதைந்த ஒரு விவசாயியை நான் சந்தித்தேன்.

    ''நாட்டை காக்க எல்லையில் போரிடும் ராணுவ வீரர்களை போல், நீங்களும் எல்லையில் போராடுகிறீர்கள்'' என்று அவரிடம் சொன்னேன்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவோம்.

    அதுபோல், சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக எக்ஸ்ரே போன்றது. நாட்டின் சமூக, பொருளாதார நிலையை படம்பிடித்து காட்டும். நாட்டில் 70 சதவீதம்பேர், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

    ஆனால், மத்திய அரசின் செயலாளர்களில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். 650 ஐகோர்ட்டு நீதிபதிகளில் 100 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகத்திலும் பிற்படுத்தப்பட்டோருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை.

    ஆகவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்.

    மோடி அரசு பெரும் பணக்காரர்களின் ரூ.14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. ஆனால், கிராமப்புற ஏழைகளுக்கான 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். சாமானியர்களை பார்க்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×