search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எம்எஸ்பி-க்கான உத்தரவாத சட்டம் விவசாயிகளை ஜிடிபி வளர்ச்சிகான உந்து சக்தியாக மாற்றும்: ராகுல் காந்தி
    X

    எம்எஸ்பி-க்கான உத்தரவாத சட்டம் விவசாயிகளை ஜிடிபி வளர்ச்சிகான உந்து சக்தியாக மாற்றும்: ராகுல் காந்தி

    • 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • கார்ப்பரேட் வரி விலக்கு 1.8 லட்சம் கோடி அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

    விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் "டெல்லி சலோ" என்ற பெயரில் டெல்லி நகரில் பேரணி செல்ல முயன்றனர்.

    ஆனால் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தங்களை டெல்லிக்கு அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மத்திய அரசு விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை நான்கு கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. 4-வது கட்ட பேச்சுவார்த்தையின்போது குறிப்பிட்ட பருப்பு வகைகள், காட்டன், சோளம் உள்ளிட்டவைகளுக்கு ஐந்தாண்டுகள் குறைந்தபட்ச ஆதாய விலை வழங்கப்படும் என மத்திய அரசு பரிந்துரை செய்தது. மேலும் பல பரிந்துரைகளை முன்வைத்தது.

    ஆனால், விவசாயிகள் மத்திய அரசின் பரிந்துரையை ஏற்கவில்லை. நாளை முதல் பேரணி தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் எம்.எஸ்.பி.-க்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை விவசாயிகள் பட்ஜெட்டின் சுமையாக உருவாக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக ஜிடிபி வளர்ச்சியின் உந்து சக்தியாக இருப்பார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் "மோடியின் பிரசார இயந்திரங்கள், அவருக்கு சாதகமாக ஊடகங்களும் எம்.எஸ்.பி. குறித்து பொய்களை பரப்பி விட்டன. மத்திய அரசின் பட்ஜெட்டில் எம்.எஸ்.பி.க்கான சட்ட உத்தரவாதத்திற்கு சாத்தியமில்லை என்பது பொய்.

    CRISIL-ன் கருத்துப்படி 2022-23-ல் விவசாயிகளுக்கு எம்.எஸ்.பி. அளித்திருந்தால், கூடுதலாக 21 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு சுமையைாக இருந்திருக்கும். இது மொத்த பட்ஜெட்டில் 0.4 சதவீதம்தான். இது உண்மை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரி விலக்கு 1.8 லட்சம் கோடி அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான இந்த சிறிய அளவிலான செலவை மத்திய செய்ய மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

    விவசாயத்துறையில் முதலீடு அதிகரிக்கும். கிராமப் பகுதிகளில் தேவை அதிகரிக்கும். விதவிதமான பயிர்களை வளர்ப்பதில் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படும். இது நாட்டின் செழிப்பிற்கு உத்தரவாதம். வதந்தி பரப்புவது டாக்டர் சுவாமிநாதன் மற்றும் அவரது கனவை இழிவுப்படுத்துவதாகும் என்றார்.

    Next Story
    ×