search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் தேர்தல் களத்தில் காங்கிரசை காணவில்லை- குஷ்பு பேட்டி
    X

    குஜராத் தேர்தல் களத்தில் காங்கிரசை காணவில்லை- குஷ்பு பேட்டி

    • குஜராத் மாநிலம் தான் பிரதமர் மோடியை நாட்டுக்கு அடையாளம் காட்டியது.
    • மும்முனை போட்டி என்கிறார்கள். ஆனால் களத்தில் காங்கிரசை காணவில்லை.

    ராஜ்கோட்:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் தமிழில் முன்னணி நடிகையுமான குஷ்புவை குஜராத் தேர்தல் களத்தில் பா.ஜனதா இறக்கி உள்ளது.

    நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    நேற்று ராஜ்கோட் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முதல்கட்ட தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது.

    குஜராத் தேர்தல் பிரசாரம் மற்றும் கள நிலவரம் பற்றி குஷ்பு கூறியதாவது:-

    குஜராத் மாநிலம் தான் பிரதமர் மோடியை நாட்டுக்கு அடையாளம் காட்டியது. அந்த மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை முதல் மந்திரியாக இருந்தவர் மோடி... காங்கிரசின் கைகளில் இருந்து ஆட்சியை கைப்பற்றிய பா.ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சியால் வழங்க முடியாத வளர்ச்சியை கடந்த 20 ஆண்டுகளில் கொடுத்துள்ளது.

    அதனால்தான் எங்கு சென்றாலும், மோடி... மோடி இதுதான் அங்குள்ள மக்களின் மந்திரமாக உள்ளது. அவர்களை பொறுத்தவரை இப்போதும் மோடி சர்க்கார் நடப்பதாகவே நினைக்கிறார்கள்.

    மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 27 தொகுதிகள் பழங்குடியினர் தொகுதி. பழங்குடியினர் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது மோடி ஆட்சியில்தான் என்கிறார்கள்.

    அடிப்படை வசதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. தண்ணீர் பிரச்சினை, மின்சார பிரச்சினை இல்லை. எந்த பக்கம் சென்றாலும் மிகுந்த உற்சாகத்துடன் மக்கள் வரவேற்கிறார்கள். இந்த முறையும் பா.ஜனதா ஆட்சிதான் என்பதைவிட இதுவரை பெற்றதை விட கூடுதலான தொகுதிகளில் பா.ஜனதா வெற்றிபெறும் என்பது உறுதி.

    மும்முனை போட்டி என்கிறார்கள். ஆனால் களத்தில் காங்கிரசை காணவில்லை. அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பிரசாரத்துக்கு செல்லமாட்டார். எங்கு தேர்தல் இல்லையோ அங்குதான் சென்று தேர்தல் பிரசாரம் செய்வார்.

    இப்போதும், தெலுங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறார். போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் காங்கிரஸ் எதிர்பாராத தோல்வியை சந்திக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே போட்டியில் இல்லை என்ற நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×