என் மலர்
இந்தியா

கேரளாவில் சாலை சந்திப்புக்கு வைக்கப்பட்டிருந்த 'பாகிஸ்தான் முக்கு' என்ற பெயரை மாற்ற முடிவு
- பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல் நம்நாட்டில் மக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை எற்படுத்தி இருக்கிறது.
- எதிரி நாட்டின் பெயர் நம் நாட்டில் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது.
திருவனந்தபுரம்:
ஐம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் இருப்பிடங்களின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே போர் ஏற்பட்டது. இரு நாட்டினரும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதவில் ஜம்மு காஷ்மீரில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.
இந்தநிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து போர் கை விடப்பட்டது. இருந்த போதிலும் பாகிஸ்தான் எப்போது தாக்குதல் நடத்தினாலும் பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தினர் எல்லைகளில் தொடர்ந்து உஷார் நிலையில் உள்ளனர்.
பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல் நம்நாட்டில் மக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை எற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் பல ஆண்டுகளாக பிரதான சாலை சந்திப்பின் பெயராக இருந்து வரும் "பாகிஸ்தான் முக்கு" என்ற பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள குன்னத்தூர் கிராம பஞ்சாயத்து நிலக்கல் வார்டில் பிரதான சாலை ஒன்றின் சந்திப்பின் பெயர் "பாகிஸ்தான் முக்கு" என்று வைக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்த சந்திப்பு அந்த பெயரை வைத்தே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்தநிலையில் தற்போது நம் நாட்டின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, எதிரி நாட்டின் பெயர் நம் நாட்டில் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அதே கோரிக்கையை வலியு றுத்தினர். "பாகிஸ்தான் முக்கு" என்ற பெயரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறினர்.
இந்த கோரிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பஞ்சாயத்து குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வார்டு உறுப்பினர் அனீஷ்யா முன்வைத்தார். அதற்கு ஏராளமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து "பாகிஸ்தான் முக்கு" என்ற பெயரை மாற்ற ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
"பாகிஸ்தான் முக்கு" என்ற பெயரை "இவருகலா" என்று மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பித்தபிறகு முறையான அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.






