என் மலர்
இந்தியா

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்: போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
- பதினெட்டாம் படியில் பக்தர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவார்கள்.
- மதியம் கோவில் நடை சாத்தப்பட்டிருந்த நேரத்தில் பதினெட்டாம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் புனிதமாக கருதப்படும் ஒன்று பதினெட்டாம் படி. மாலையணிந்து கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், பதினெட்டாம் படியில் பணியில் இருந்த போலீசார், அதில் நின்று குரூப்-போட்டோ எடுத்திருக்கின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. சபரிமலையில் மிகவும் புனிதமாக மதிக்கப்படும் பதினெட்டாம் படியில் போலீசார் இவ்வாறு நடந்து கொண்டது பக்தர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த செயலுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.
பதினெட்டாம் படியில் பக்தர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவார்கள். அது போன்று தான் கடந்த 14-ந்தேதி பணிக்கு வந்த போலீசார், 25-ந்தேதியுடன் பணி முடிந்து புறப்படும் போது, மதியம் கோவில் நடை சாத்தப்பட்டிருந்த நேரத்தில் பதினெட்டாம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பதினெட்டாம்படியில் நின்று குரூப் போட்டோ எடுத்த 23 போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 23 போலீசாருக்கு நன்னடத்தை பயிற்சி அளிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.






