என் மலர்
இந்தியா

சர்ச்சை எதிரொலியால் பறந்த நோட்டீஸ்: இரண்டு முறை ஜே.பி. நட்டாவை சந்தித்த கங்கனா ரனாவத்
- விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதால் கடும் விமர்சனம்.
- பாஜக கூட இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
பாலிவுட் நடிகையும், பத்மஸ்ரீ விருது வென்றவருமான கங்கனா ரனாவத் பாஜக கட்சியில் இணைந்து இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தேர்தலில் போட்டியிட்டதில் இருந்து தற்போது வரை அவ்வப்போது அவர் பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
அந்த வகையில்தான் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசும்போது "விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும்.
விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்" என தெரிவித்திருந்தார்.
விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட உயர் தலைவர்களும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த கருத்துக்கு பா.ஜ.க.-வும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதேவேளையில் கங்கனா ரனாவத் கருத்தில் இருந்து விலகியிருந்தது.
தொடர்ந்து விமர்சனம் எழுந்ததால் பாஜக தேசிய தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியனாது. இந்த நிலையில் நேற்று ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் என்ன விளக்கம் அளித்தார் என்பது குறித்த எந்த தகவலையும் பாஜக வெளியிடவில்லை.
இந்த வாரத்தில் இரண்டு முறை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை கங்கனா ரனாவத் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, மத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பா.ஜ.க. அரசுக்கு எதிராகப் போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிம்ரன்ஜித் சிங் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அவருக்கு கற்பழிப்பு அனுபவம் அதிகம். அதனால் அவர் நன்றாக அறிந்திருக்க வேண்டும். கற்பழிப்பு எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் அவரிடம் கேட்கலாம். மக்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது போலவே, அவருக்கு இதேபோன்ற பலாத்கார அனுபவம் உண்டு" என காட்டமாக தெரிவித்தார்.






