என் மலர்
இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவிற்கு எந்த பங்கும் இல்லை: ஜெய்சங்கர்
- ஐ.நா. சபையின் தடை பட்டியலில் உள்ள பிரபலமான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளனர்.
- மே 10-ந்தேதி அன்று சண்டையை நிறுத்தி கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் தரப்புதான் முதலில் தெரிவித்தது.
புதுடெல்லி:
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த போர் கடந்த 10-ந்தேதி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்த் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நெதர்லாந்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் பாராட்டுக்குரியது. இந்தியாவை பொருத்தவரை பயங்கரவாத பிரச்சனையும், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையும் தனித்தனியான விஷயங்கள்.
பயங்கரவாதம் என்பது ஒரு சுயாதினமான, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத சர்வதேச குற்றமாகும். அதை மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ கூடாது.
ஏப்ரல் 22-ந்தேதி அன்று பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள துடிப் பான சுற்றுலாத்துறையை குறி வைத்தனர். அவர்கள் தங்கள் சுய நோக்கங்களுக்காக காஷ்மீரில் உள்ள பொருட்களை அழிக்க தயாராக உள்ளனர். அவர்கள் வேண்டுமென்றே தாக்குதலுக்கு மத சாயலையும் கொடுத்தனர். உலகம் இத்தகைய நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள கூடாது.
நாங்கள் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள பயங்கரவாதிகளின் தளங்களை தான் தாக்கினோம்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பட்டியலில் உள்ள முக்கிய பயங்கரவாதிகள், அவர்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் செயல்படும் இடங்கள் பற்றிய விபரங்கள் உள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. பஹல்காமில் நடந்ததுபோன்ற தாக்குதல் நடந்தால் எங்கள் பதிலடி இப்படிதான் இருக்கும் என்பதையே ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தி உள்ளது.
பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தாலும் தேடிச்சென்று அழிப்போம். பாகிஸ்தான் அரசும், அதன் ராணுவமும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது. ஐ.நா. சபையின் தடை பட்டியலில் உள்ள பிரபலமான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளனர். அவர்கள் அங்குள்ள பெரிய நகரங்களில் சாதாரணமாக செயல்படுகிறார்கள். அவர்களின் முகவரிகள் அறியப்படுகிறது. அவர்களின் செயல்களும் தெரிகிறது.
ஆம்ஸ்டர்டாம் போன்ற ஒரு நகரத்தின் நடுவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணுவ பயிற்சிக்காக கூடியிருந்த பெரிய ராணுவ மையங்கள் இருந்ததாக வைத்துக்கொள்வோம். உங்கள் அரசாங்கத்திற்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என கூற முடியுமா? நிச்சயம் இல்லை. அது போலத்தான் பாகிஸ்தான் அரசுக்கு பயங்கரவாதத்துடன் சம்பந்தம் இல்லை என்று பாசாங்கு செய்ய வேண்டாம்.
மே 10-ந்தேதி அன்று சண்டையை நிறுத்தி கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் தரப்புதான் முதலில் தெரிவித்தது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு சண்டையை நிறுத்தினோம்.
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ ஆகியோர் பிரதமர் மோடியிடமும், என்னிடமும் பேசினர். அவர்களிடம் நாங்கள் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தினோம். சண்டையை நிறுத்தி கொள்ள பாகிஸ்தான் விரும்பினால் அவர்கள் நேரடியாக எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினோம்.
இறுதியில் அதுதான் நடந்தது. இந்த சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






