என் மலர்
இந்தியா

துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு ராஷ்டிரபதி பவனுக்கு சென்ற ஜெகதீப் தன்கர்.. ஏன்?
- அவரது பதவிக்காலம் 2027 இல் முடிவடைய இருந்தது.
- வேறு ஏதோ காரணத்தால் ஏற்பட்டது என்று காங்கிரஸ் கூறுகிறது.
உடல்நலக்குறைவை காரணம் காட்டி திங்கள்கிழமை இரவு துணை ஜனாதிபதி பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்வதற்கு சற்று முன்பு ஜக்தீப் தன்கர் ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.
திங்கள்கிழமை மாலையில் தன்கர் ராஷ்டிரபதி பவனில் வைத்து ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
அரை மணி நேரம் கழித்து, துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக தன்கர் அறிவித்தார்.
74 வயதான தன்கர், ஆகஸ்ட் 2022 இல் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2027 இல் முடிவடைய இருந்தது.
மாநிலங்களவை தலைவராகவும் தன்கர், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தனது ராஜினாமாவை அறிவித்தது விவாதத்தை தூண்டியது.
இந்த எதிர்பாராத ராஜினாமா உடல்நலக் காரணங்களால் அல்ல, வேறு ஏதோ காரணத்தால் ஏற்பட்டது என்று காங்கிரஸ் கூறுகிறது.
இதற்கிடையில், தன்கர் ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எடுத்த ஒரு குறிப்பிடத்தக்க நிலைப்பாடு காரணமாக அவரது ராஜினாமா நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
திங்களன்று, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் முன்மொழிவை தன்கர் ஏற்றுக்கொண்டார். இது குறித்து மத்திய அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உட்பட அனைவரிடமிருந்தும் கையொப்பங்களை சேகரித்து நீதிபதி வர்மாவை நீக்குவதற்கான தீர்மானத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு தயாராகி வந்தது. தங்கரின் அவசர நடவடிக்கையே மத்திய அரசின் அதிருப்திக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.






