search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு: ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு
    X

    5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு: ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு

    • 2ஜி அலைக்கற்றை வெறும் 30 'மெகா ஹெர்ட்ஸ்'தான் ஏலம் விடப்பட்டது.
    • 2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது.

    புதுடெல்லி :

    டெல்லியில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வனஉயிர் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கிடையே, புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் உள்ளிட்ட சரணாலய பகுதிகளில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் எந்தவித கட்டுமான பணிகளும், வளர்ச்சிப்பணிகளும் இருக்கக்கூடாது என ஏன் ஒரு சட்டத்தை வகுக்கக்கூடாது? என கேட்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதனால் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைமத்திய வனத்துறை மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவர் இதுகுறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதாக உறுதி தந்து இருக்கிறார்.

    5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது.

    2ஜி அலைக்கற்றை வெறும் 30 'மெகா ஹெர்ட்ஸ்'தான் (அதிர்வெண் அளவு) ஏலம் விடப்பட்டது. அதை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் கொடுத்தபோது ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் அறிக்கை அளித்தார்.

    2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது. 2ஜி-யில் வெறும் குரல்தான் சென்றது. 3ஜி-யில் வீடியோ வந்தது. இப்போது 5ஜி-யில் எந்த ஒரு இணைய தேடுதலாக இருந்தாலும் ஒரு நொடியில் வந்துவிடும்.

    இந்த திறன் அடிப்படையில் பார்த்தால் ரூ.5 லட்சம் கோடி அல்லது ரூ.6 லட்சம் கோடிக்கு ஏலம் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. அப்படியானால் திட்டமிடுதலில் மோசமா? நாலைந்து கம்பெனிகளோடு சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்ததா?. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

    2ஜி-க்கும், 5ஜி-க்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே எவ்வளவு பெரிய மோசடியை வினோத்ராய் செய்திருக்கிறார் என்பது தெரியும். அவர் யாருக்காக இதை செய்து இருக்கிறார்?. ஒரு ஆட்சி மாற்றத்துக்காக அவரது பின்னால் யார் யாரெல்லாம் இருந்தனர்? என்பதை விசாரிக்க வேண்டும்.

    இதற்கு அரசு முன்வரவில்லை என்றால், இந்த அரசு நிச்சயமாக மாறும். அப்படி மாறும்போது அடுத்து வருகிற அரசாங்கமாவது விசாரித்து நாட்டுக்கு உண்மையை சொல்ல வேண்டும். இது ஒரு மிகப்பெரிய மோசடி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×