என் மலர்
இந்தியா

பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை: குமாரசாமி வலியுறுத்தல்

- தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தான் உள்ளது.
- உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ராமநகர் :
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நடைபெற்ற பா.ஜனதா ஆட்சி மீது காங்கிரசார் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். இந்த குற்றச்சாட்டை காங்கிரசார் நிரூபித்தார்களா?. லோக்அயுக்தாவில் அவர்கள் புகார் செய்தனரா?. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கனவே 40 சதவீதம் கொடுத்தது போக தற்போது தங்களுக்கு 5 சதவீத கமிஷன் வழங்குமாறு மந்திரிகள் கேட்பதாக நான் கூறினேன்.
இதுகுறித்து லோக்அயுக்தாவில் புகார் அளிக்கும்படி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சொல்கிறார். தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தான் உள்ளது.
40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதில் உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். குற்றச்சாட்டு கூறியவர்களிடம் ஆதாரங்கள் இருக்க வேண்டும் அல்லவா?.
ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினரும் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். அவர்கள் ஆதாரம் கொடுத்தார்களா?. லோக்அயுக்தாவில் புகார் அளிக்க காங்கிரசாரை யார் தடுத்தனர்?. கடந்த மே மாதம் 8-ந் தேதி பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.675 கோடி பட்டுவாடா செய்யாதது ஏன்?. அதை விடுவிக்காமல் வைத்து கொண்டிருப்பது ஏன்?. இதுகுறித்து டி.கே.சிவக்குமார் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
இதற்கு முன்னதாக சன்னபட்டணாவில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை குமாரசாமி நடத்தினார். இதில் அந்த தாலுகா அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த பகுதியில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி குமாரசாமி உத்தரவிட்டார்.