என் மலர்tooltip icon

    இந்தியா

    தெற்கு ரெயில்வேயில் அறிமுகம்- ரெயில்களில் உள்ளூர் உணவு கிடைக்க ஏற்பாடு
    X

    தெற்கு ரெயில்வேயில் அறிமுகம்- ரெயில்களில் உள்ளூர் உணவு கிடைக்க ஏற்பாடு

    • எந்த ரெயில், எந்த பிராந்தியம் வழியாக கடந்து சென்றாலும், அந்த பிராந்தியத்தின் உணவு, பயணிகளுக்கு கிடைக்கச் செய்வோம்.
    • வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என எந்த பகுதியாக இருந்தபோதிலும், அந்த பகுதி உணவு வகைகள் கிடைக்கும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் ஒரு கேள்வி எழுப்பினார்.

    தமிழ்நாட்டில் ஓடும் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தென் இந்திய உணவு வகைகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் கோரினார். ரெயில்களின் சமையலறை பெட்டி ஊழியர்கள் பெரும்பாலும் இந்தியிலேயே பேசுவதால், பயணிகள் தங்கள் தேவைகளை கேட்பதில் சிரமம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

    அதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

    ரெயில் பயணிகளுக்கு உள்ளூர் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் முக்கியமான பரிசோதனையை தெற்கு ரெயில்வேயில் ரெயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இன்னும் நிறைய ரெயில்களில் உள்ளூர் உணவுகள் கிடைக்கும்.

    இத்திட்டம், நாடு முழுவதற்குமானது. எந்த ரெயில், எந்த பிராந்தியம் வழியாக கடந்து சென்றாலும், அந்த பிராந்தியத்தின் உணவு, பயணிகளுக்கு கிடைக்கச் செய்வோம்.

    வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என எந்த பகுதியாக இருந்தபோதிலும், அந்த பகுதி உணவு வகைகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு கேள்விக்கு அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

    ரெயில் பாதுகாப்பில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ஆண்டுக்கு சுமார் 700 ரெயில் விபத்துகள் நடந்தன. மம்தா பானர்ஜி ரெயில்வே மந்திரியாக இருந்தபோது சுமார் 400 விபத்துகள் நடந்தன. மல்லிகார்ஜுன கார்கே ரெயில்வே மந்திரியாக இருந்தபோது சுமார் 385 விபத்துகள் நடந்தன.

    ஆனால், தற்போது முடிவடைந்துள்ள 2024-2025 நிதியாண்டில் 81 ரெயில் விபத்துகள்தான் நடந்தன. ரெயில் விபத்துகளை மேலும் குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×