என் மலர்tooltip icon

    இந்தியா

    மோசடியில் இது புது ரகம்!- வாடகை கொடுக்காமல் 5 மாதம் ஓட்டலில் தங்கி இருந்த வாலிபர்
    X

    மோசடியில் இது புது ரகம்!- வாடகை கொடுக்காமல் 5 மாதம் ஓட்டலில் தங்கி இருந்த வாலிபர்

    • ஓட்டல் நிர்வாகம் தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது, ஒரு ரூபாய் கூட வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
    • மொத்தம் ரூ.6.17 லட்சம் பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அரியானா மாநிலம் சோனாவைச் சேர்ந்தவர் ஹிமான்ஷூ (வயது 26). எம்.சி.ஏ. பட்டம் பெற்ற இவர், யூடியூப் சேனல் விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். குருகிராம் டி.எஸ்.எப் பேஸ்-5 பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஹிமான்ஷு தங்கி வந்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி 24-ந்தேதி வரை தங்கியிருந்த அவர், ஓட்டல் வாடகையாக 16 தவணைகளில் பணம் செலுத்தியதாகக் கூறி, அதற்கான 'ஸ்கிரீன்ஷாட்'டுகளை வாட்ஸ்அப் மூலம் ஓட்டல் மேலாளருக்கு அனுப்பியுள்ளார்.

    ஓட்டல் நிர்வாகம் தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது, ஒரு ரூபாய் கூட வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஹிமான்ஷுவிடம் கேட்டபோது, அவர் வங்கி கணக்கு விவரங்களை தர மறுத்துவிட்டு ஓட்டலை விட்டு வெளியேறினார். மொத்தம் ரூ.6.17 லட்சம் பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஓட்டல் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷுவை கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. "போலி போன்பே செயலி மூலம் பணம் செலுத்தியது போல் எப்படி ஏமாற்றுவது என்பது குறித்து யூடியூப்பில் வீடியோ பார்த்தேன். அதன் மூலம் ஒரு போலி செயலியை பதிவிறக்கம் செய்து, ஓட்டல் மேலாளருக்கு போலி ஸ்கிரீன்ஷாட்டுகளை அனுப்பி ஏமாற்றினேன்" என்று அவர் ஒப்புக்கொண்டார்.

    அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×