என் மலர்
இந்தியா

நிதிஷ் குமார் கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் - பிரசாந்த் கிஷோர் சபதம்
- தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
- நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலா 101 தொகுதிகள், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
121 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகளும், 122 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.8 சதவீத வாக்குகளும் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கூறப்படுகிறது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகத்தின் நேர்காணலில் கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், `தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது.
இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.






