என் மலர்
இந்தியா

டெல்லியில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்.. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்
- பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறுகளை போல ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
- டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
டெல்லியில் நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் முற்றிலுமாக நீரில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பஞ்ச்குயன் மார்க், மதுரா சாலை, பாரத் மண்டபத்தின் நுழைவாயிலில் உள்ள சாலைகள், சாஸ்திரி பவன், ஆர்.கே. புரம், மோதி பாக் போன்ற பகுதிகள் நீரில் மூழ்கின.
பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறுகளை போல ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கனமழையால் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் Flightradar தகவல் தெரிவிக்கிறது.
இருப்பினும், விமான நிலையத்தின் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்வதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறுபுறம், டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை தொடர வாய்ப்புள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேபோல் இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு பகுதியில் மேகவெடிப்பால் கனமழை பெய்து வருகிறது. சண்டிகர் - மணாலி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.






