என் மலர்
இந்தியா

1 வருடமாக துன்புறுத்தல்.. பள்ளி மாடியில் இருந்து குதித்து 9 வயது சிறுமி தற்கொலை - வெளிவரும் பகீர் தகவல்கள்
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீர்ஜா மோடி என்ற பிரபல பள்ளி இயங்கி வருகிறது.
- ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டபோது , அவர் அலட்சியமாக, "இது ஒரு இருபாலர் பள்ளி, அவர்கள் ஆண்களிடமும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீர்ஜா மோடி என்ற பிரபல பள்ளி இயங்கி வருகிறது.
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் அமய்ரா 9 வயது சிறுமி பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அமய்ரா மாடியில் இருந்து குடித்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமய்ரா கடந்த 1 வருடமாக சக மாணவர்களால் பாலியல் வக்கிரத்துடன் மோசமான வார்த்தைகளால் வாய்மொழியாக துன்புறுத்தப்பட்டு வந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
1 வருடதிற்கு முன்பு, "நான் பள்ளி செல்ல மாட்டேன்.. என்னை அனுப்பாதீர்கள்' என தன்னிடம் கூறியதை பதிவு செய்து அந்த ஆடியோவை அமய்ராவின் வகுப்பு ஆசியருக்கு தாயார் ஷிவானி மீனா அனுப்பி உள்ளார்.
மேலும் தனது மகளின் அச்சம் குறித்து பல முறை பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் அது அலட்சியம் செய்யப்பட்டதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
அமய்ராவின் தந்தை விஜய் மீனா கூறுகையில், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பின் போது, சில மாணவர்கள் எனது மகளையும் மற்றொரு பையனையும் நோக்கி சைகைகளைச் செய்தனர். இது அமய்ராவை பயமுறுத்தி, தனது பின்னால் ஒளிந்து கொள்ள வைத்தது.
ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் அலட்சியமாக, இது ஒரு இருபாலர் பள்ளி, அவர்கள் ஆண்களிடமும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்" என தெரிவித்தார்.
தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அமய்ரா தனது வகுப்பு ஆசிரியரிடம் இரண்டு முறை சென்று பேசுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இருப்பினும், சிபிஎஸ்இ விதிகளின்படி வகுப்பறை சிசிடிவிகளில் ஆடியோ பதிவு கட்டாயமாக இருந்தாலும், இந்த காட்சிகளில் எந்த ஒலியும் இல்லை. இதனால் அவர் ஆசிரியரிடம் என்ன பேசினார் என்பது தெரியவில்லை.
ஆறு மாடி கட்டிடத்திற்கு குறைந்தபட்ச பாதுகாப்பாக கிரில் அல்லது வலைகள் ஏன் நிறுவப்படவில்லை? சிசிடிவி காட்சிகளில் ஏன் ஆடியோ இல்லை? லட்சக்கணக்கில் கட்டணங்களை வசூலிக்கும் நிர்வாகத்திற்கு எந்த பொறுப்பும் இல்லையா?" என்று அமய்ராவின் உறவினர் சாஹில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பெற்றோரிடமிருந்து வாக்குமூலங்களை எடுத்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக ஜெய்ப்பூர் டிசிபி ராஜர்ஷி ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.






