search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி அரசுக்கு முழு ஆதரவு: நடிகை சுமலதா எம்.பி. அறிவிப்பு
    X

    பிரதமர் மோடி அரசுக்கு முழு ஆதரவு: நடிகை சுமலதா எம்.பி. அறிவிப்பு

    • பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.
    • பிரதமர் மோடி நாளை(12-ந் தேதி) மண்டியாவுக்கு வருகிறார்.

    பெங்களூரு :

    மண்டியா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் சுமலதா அம்பரீஷ். நடிகையான இவர் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி ஆவார். இவரது மகன் அபிஷேக்கும் தற்போது கன்னட திரைஉலகில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மண்டியாவில் சுமலதா அம்பரீஷ் எம்.பி. நிருபர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    நான் எந்த கட்சியிலும் சாராதவள். மண்டியா மாவட்டத்தில் நான் ஏராளமான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துள்ளேன். இந்த வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசே காரணம். இதன்காரணமாக நான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மண்டியா மாவட்டத்தில் உள்ள அசுத்தமான அரசியலை சுத்தப்படுத்தவே நான் பிரதமர் மோடி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். எனது முடிவில் ஆபத்து இருக்கக்கூடும். அதைவிட மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள், அவர்களின் முன்னேற்றம் முக்கியம். பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.

    எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது டெல்லியில் என்னை சந்தித்து மண்டியா மாவட்டத்துக்காக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அப்போது நான் கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் தெரிவித்தேன். மேலும் மைசுகர் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

    அதுபோல் எடியூரப்பா மைசுகர் ஆலையை திறந்தார். மண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரூ.50 கோடி நிதி வழங்கி உள்ளார். வளர்ச்சிப் பணிகள் நடைபெற வேண்டும் என்றால் அதற்கு பா.ஜனதா வேண்டும். அதற்காகத்தான் நான் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். எனக்கு எம்.எல்.சி. பதவியும் வந்தது. பெங்களூருவில் ஏதாவது ஒரு தொகுதியில் களம் இறங்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் நான் மண்டியாவுக்கு வந்து அப்போது முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமியின் மகன் நிகிலை எதிர்த்து போட்டியிட்டேன்.

    மண்டியா மக்கள் அம்பரீஷ் மீது அன்பு வைத்தனர். அவர் போகும்போது ஒரு மகாராஜரைப் போல அனுப்பி வைத்தனர். அவர்களது அன்புக்காக நான் தேர்தலில் போட்டியிட்டேன். மண்டியா மக்கள் என் பக்கம் நின்றனர். மேலும் திரைஉலகினர், அம்பரீஷின் ஆதரவாளர்கள், என்னுடைய மக்கள் என் பக்கம் நின்றனர். நான் யார், அம்பரீஷ் யார் என்று இந்திய நாட்டுக்கே தெரியும். நான் அரசியலுக்கு வந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. நான் அரசியலுக்கு வந்தது தவிர்க்க முடியாததால் அல்ல, அது ஒரு எதிர்பாராதது. நான் என் சுயநலத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. என் மக்களின் கட்டாயத்திற்கு பணிந்து அரசியலுக்கு வந்தேன்.

    அம்பரீஷின் விருப்பத்தால் நான் அதிகாரத்திற்கு வந்தேன். அரசை எதிர்த்து நான் தேர்தலில் நின்றேன். எனக்கு அப்போது எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற சிந்தனை எல்லாம் இல்லை. மக்களுக்காக வந்தேன். மக்கள் என் மீது காட்டும் அன்பு, ஆதரவுக்கு விலையே இல்லை. அதற்கு விலை கொடுப்பதும் மனிதத்தன்மை இல்லை.

    பிரதமர் மோடி நாளை(12-ந் தேதி) மண்டியாவுக்கு வருகிறார். அவர் மண்டியாவுக்கு வருவது நமக்கு பெருமை. அவர் நினைத்திருந்தால் இந்த 10 வழிச்சாலையை மைசூருவிலோ அல்லது பெங்களூருவிலோ வைத்து திறந்து வைத்திருக்கலாம். ஆனால் அவர் மண்டியா மாவட்டத்தில் வைத்து 10 வழிச்சாலையை திறந்து வைப்பது நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி மண்டியாவுக்கு வர உள்ள நிலையில் சுமலதா அம்பரீஷ், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு தனது முழு ஆதரவை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    மண்டியா மாவட்டத்தில் ஒக்கலிக சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த மாவட்டத்தில் காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பலமான கட்சிகளாக உள்ளன. இந்த நிலையில் மண்டியா மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியை பலப்படுத்த அக்கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக ஆர்.அசோக் மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் திடீரென மாற்றப்பட்டார். இந்த நிலையில் மண்டியா தொகுதி எம்.பி.யாக உள்ள நடிகை சுமலதா அம்பரீஷ், பா.ஜனதாவுக்கு தனது முழு ஆதரவை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×