என் மலர்
இந்தியா

பரிதாபத் முதல் புல்வாமா வரை.. பல பேரிடம் கைமாறிய கார்.. டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் புது தகவல்
- ஆர்சி ஆவணத்தின் உரிமையாளர் சல்மான், போலீஸ் காவலில் உள்ளார்.
- காலை 8.13 மணிக்கு பதர்பூர் எல்லை சுங்கச்சாவடியைக் கடக்கும் கார் பற்றிய சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன் தினம் மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.
கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டையே உலுக்கிய இந்த வெடிப்புக்குக் காரணமான கார் பல முறை விற்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அரியானா பதிவு எண்ணைக் கொண்ட 2013 மாடல் ஹூண்டாய் i20 மாடல் காரின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் குருகிராமைச் சேர்ந்த சல்மான் ஆவார்.
சல்மான் வேறு ஒருவரிடமிருந்து காரை வாங்கி 2014 இல் தனது பெயரில் பதிவு செய்துள்ளார். போலீசார் சல்மானைத் தொடர்பு கொண்டபோது, ஓக்லாவைச் சேர்ந்த தேவேந்திரா என்ற நபருக்கு காரை விற்றதாகக் கூறினார்.
பின்னர் தேவேந்திராவைத் தொடர்பு கொண்டபோது, அது அம்பாலாவில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் அது ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அமீருக்கு விற்கப்பட்டது. அமீரிடமிருந்து, அக்டோபர் 29 ஆம் தேதி மாலை பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த டாக்டர் உமர் முஹம்மதுவின் கைகளுக்கு அது சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆர்சி ஆவணத்தின் உரிமையாளர் சல்மான், போலீஸ் காவலில் உள்ளார். இவ்வளவு முறை விற்கப்பட்டபோதும் உரிமை தொடர்பான ஆர்.சி. ஆவணங்களை மாற்றத் தவறியது சந்தேகத்தை அதிர்க்கரித்துள்ளது.
அரியானாவின் பரிதாபாத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 8 மணியளவில் பதர்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் அந்த ஹூண்டாய் i20 கார் கார் நுழைந்தது.
காலை 8.13 மணிக்கு பதர்பூர் எல்லை சுங்கச்சாவடியைக் கடக்கும் கார் பற்றிய சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.
காலை 8.20 மணியளவில் ஓக்லா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பின் சிசிடிவி காட்சிகளிலும் இந்த கார் பதிவாகியுள்ளது.
மதியம் 3.19 மணிக்கு செங்கோட்டை அருகே உள்ள பார்க்கிங் பகுதிக்குள் வாகனம் நுழைந்தது. மாலை 6.22 மணிக்கு அங்கிருந்து மெதுவாக நகர்ந்த கார், நேதாஜி சுபாஷ் மார்க்கில் உள்ள போக்குவரத்து சிக்னலை அடைவதற்கு சற்று முன்பு, மாலை 6.52 மணிக்கு வெடித்தது.
வெடிவிபத்து ஏற்பட்ட அதே நாளில் அரியானாவில் பரிதாபாத்தில் காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. எனவே இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.






